அபிவிருத்திக்கான போரை ஒன்றிணைந்து ஆரம்பிப்போம்!

வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 05 – 10 வருடங்களில் வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்க காணி வழங்கி மக்களுக்கு நன்றி. தாளையடி பகுதிக்கு தனியானதொரு கிராம சேவகர் பிரிவை நிறுவுமாறு மக்கள் கோரியுள்ளனர். அதனை செய்யுமாறு ஆளுநருக்கு பணிப்புரை விடுப்பேன். இந்த சுத்திகரிப்பு நிலையம் யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வை வழங்கும்.

எதிர்காலத்தில் வலவ கங்கை நீர்த்திட்டத்தையும் ஆரம்பிப்போம், அதனால் பூநகரிக்கு நீர் கிடைக்கும். அதேபோல் யாழ். நதி நீர் திட்டத்தை (River For Jaffna) ஆரம்பிப்போம். இந்த திட்டங்கள் வந்தால் யாழில் நீர் பிரச்சினை இருக்காது. வடமராட்சி செழிப்பான பிரதேசமாக மாறும்.

இந்த நீருக்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதனால் சூரிய சக்தியைப் பயன்படுத்தி கட்டணத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இந்த பகுதிக்கு நீர் வழங்கல் முறைகளை செயற்படுத்தி நவீன விவசாயத்தை செயற்படுத்துவோம். நீருக்கு கட்டணம் செலுத்தும் பட்சத்தில் ஒவ்வொரு லீட்டரிலும் உச்ச பயனை அடைய வேண்டும்.

‘யாழ் நதி’ திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் கலந்தாலோசிக்கிறோம். சீமெந்து நிறுவனம் இருந்த இடத்தில் முதலீட்டு வலயமொன்று ஆரம்பிக்கப்படும், பூநகரியிலும் அதனை செய்வோம். பலாலியில் சுற்றுலா துறையை மேம்படுத்துவோம். காற்று, சூரிய சக்தி மூலம் பெருமளவில் இங்கு மின் உற்பத்தி செய்ய முடியும். அதனால் மேலும் பல பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.

அடுத்த 5 -10 வருடங்களில் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும். அதேநேரம் மத்திய அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்மாண பணிகளை மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானித்துள்ளது.

மாகாண சபையினால் அதனை செய்ய முடியும். எனவே நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பிப்போம். அதற்கான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். வங்குரோத்து நிலையிலும் இந்த திட்டத்தை நிறைவு செய்ய உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்கள், சீன எக்ஸிம் வங்கி, பிணைமுறி கடன் வழங்குநர்களுடன் உடன்பாடுகளை எட்டியுள்ளோம். அதனால் வௌிநாட்டுக் கடன்கள் எமக்கு கிடைக்கும். ஜப்பான் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளது. மற்றைய நாடுகளுடனும் அந்த இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவோம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசிய போது எட்டப்பட்ட உடன்பாடுகளை கைசாத்திடும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. பால் உற்பத்திச் செயற்பாடுகளுக்காக அமுல், கார்கில்ஸ் நிறுவனங்களுடன் ஆலோசிக்கிறோம். தற்போது நாட்டுக்குள் பண புழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் இதனை தக்க வைத்துக்கொள்ள செல்ல வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் வேளையில், யாழ்ப்பாணமும் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக மாறும்.

இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி. தோாட்டப் பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்தும் பணிகளையும் அவரோடு இணைந்து முன்னெடுப்போம். எதிர்காலத்தில் இவ்வாறான பல பணிகளை செய்யவுள்ளோம்”. என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles