” பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து சந்தாப்பணம் பெறுவதனை நிறுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அதனை கட்டங்கட்டமாக செய்வோம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளப் பிரச்சினை, ஊழியர் சேமலாப நிதிக்கான கொடுப்பனவுகள் உட்பட தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில், தொழில் அமைச்சுமீது எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் விவாதத்தில் உரையாற்றுவதற்கு எதிர்ப்பார்க்கின்றேன்.
பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகள் நவீனமயப்படுத்தப்படவேண்டும். உற்பத்திதிறன் ஊக்குவிக்கப்படவேண்டும். அதன்மூலம் தொழிலாளர்களுக்கான நலன்புரி சேவைகளை அதிகரிக்கலாம்.
அதேவேளை, எங்களுடைய தொழிற்சங்கம் மட்டும்தான் சந்தா வாங்குகின்றது என்ற தொனியில் எதிரணி உறுப்பினர் ஒருவர் இங்கு கருத்து வெளியிட்டார். சந்தாப் பணம் வாங்குவது தவறு இல்லை, அதனை வாங்கிவிட்டு தொழிலாளர்களைக் கைவிடுவதுதான் பிரச்சினை.
தொழிலாளர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் இங்கு இ.தொ.கா. நிற்கும். நாம் அவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. எமக்கு அலுவலகங்கள் இருக்கின்றன. அங்கு ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கவேண்டியுள்ளது. அப்படி இருந்தும் கொரோனா பிரச்சினையின்போது நாம்தான் முதலில் சந்தாவை நிறுத்தினோம். அதன்பின்னர்தான் ஏனைய தொழிற்சங்கங்கள் அதனை செய்தன.
சந்தா அறவிடுவதை நிறுத்தவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். ” – என்றார் ஜீவன் தொண்டமான்.