எதிர்வரும் பொதுத்தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மீண்டும் களமிறங்கவுள்ளார் என்று வீகே இளைஞர் அணி செயலாளர் ஜீவன் சரண் தெரிவித்துள்ளார்.
மக்கள் விருப்பும் சின்னமொன்றில் அவர் போட்டியிடுவார் எனவும், இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஜீவன் சரண் மேலும் கூறியவை வருமாறு,
“இலங்கையில் உள்ள மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றுதான் கண்டி மாவட்டமாகும். இது வரலாற்றுடன் தொடர்புபட்ட மாவட்டமாகும். எனவே, கண்டி மாவட்டத்துக்குரிய தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது காலத்தின் கட்டாய தேவையாகக் கருதப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் களமிறக்கப்பட்டு, 2015 மற்றும் 2020 பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்றார்.
தமிழ் மக்களும், முஸ்லிம் உறவுகளும், சிங்கள சகோதரர்களும் அவருக்கு வாக்களித்து அதிஉயர் சபைக்கு அனுப்பிவைத்தனர். கண்டி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரு தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த முதல் தமிழ் அரசியல்வாதி வேலுகுமாராவார்.
கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது இலகுவாக கிடைக்கும் விடயம் அல்ல, அதற்காக கடுமையாக போராட வேண்டும். அந்த கட்டமைப்பை சிறப்பாக உருவாக்கி வைத்தவர்தான் வேலுகுமார். அதனால்தான் உள்ளாட்சிசபைத் தேர்தலில்கூட தனித்து களமிறங்கி பிரதிநிதித்துவங்களை பெற்றிருந்தோம்.
வேலுகுமார் வீழ்த்தினால் கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யலாம் என்பது சிலரின் சூழ்ச்சி. அதனால்தான் பொய்களை பரப்பி, அதனை உண்மைபோல் காண்பிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இந்த பொய் வலைக்குள் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் சிக்கமாட்டார்கள், மக்கள் என்றும் எம் பக்கம்.” – என்றார்.