இலங்கையில் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபீ ரத்னாயக்க தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாற கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை.அவருக்கு எதிரான வாக்குகள் அதிகம். 30 லட்சம்வரையானோர் வாக்களிக்கவும் இல்லை. எனவே, எதிர்காலத்தில் பாரிய சவால்கள் உள்ளன. அந்த சவால்களில் இருந்து தாய் நாட்டை மீட்பதற்கு அவருக்கு நாம் ஆதரவு வழங்குவோம்.
அரசமைப்பு மறுசீரமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்குதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாம் முழு ஆதரவு வழங்குவோம்.
அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.” – என்றார்.