🛑 நுவரெலியா மாவட்டத்தை தேசிய மக்கள் சக்தியால் கைப்பற்ற முடியுமா?
🛑 2020 இல் போன்று சஜித்தின் வாக்கு வங்கி 27 விதத்தால் சரிந்தால் அக்கட்சிக்கு 3 ஆசனங்களே இம்முறையும் கிட்டும்
🛑 வியூகம் வகுத்து செயற்பட்டால் இதொகாவால் 2 ஆசனங்களை தக்கவைக்ககூடிய சாத்தியம்
ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் கட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற அதே அளவான வாக்குகள் பொதுத்தேர்தலிலும் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அம்மாவட்டத்தில் கட்சிகளால் கைப்பற்றக்கூடிய ஆசனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக்குழு செல்லுபடியான மொத்த வாக்குகளில் 5 சதவீதத்துக்கு மேல் பெறாவிட்டால் ஆசனத்தை பெறுவதற்குரிய தகுதியை இழந்துவிடும்.
அத்துடன், 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் வாக்குகள், செல்லுபடியான வாக்குகளில் இருந்து கழிக்கப்படும். அவ்வாறு கழித்து வரும் வாக்குகளே ஆசன பங்கீட்டுக்குரிய எண்ணிக்கையாகக் கருதப்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் மொத்த வாக்குகள் – 28,519.
செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 473,935 இதிலிருந்து 28,519 ஐ கழித்தால் வருவது, 445,416 வாக்குகளாகும். ( 473,935 – 28,519) 445,416 .
நுவரெலியா மாவட்டத்துக்கு 08 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் கட்சிக்கு தானாகவே போனஸ் ஆசனம் சென்றுவிடும். எனவே, ஒரு ஆசனத்தை பெறுவதற்கு எத்தனை வாக்குகள் என்பதை நிர்ணயிப்பதற்கு 445,416 ஐ 7 ஆல் பிரிக்க வேண்டும். 445,416/ 7 = 63,630. அந்தவகையில் ஒரு ஆசனத்தை பெறுவதற்கு தேவையான வாக்குகளின் எண்ணிக்கை 63,630 ஆகும். பின்னர் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளை, 63,630 ஆல் பிரிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு நுவரெலியா மாவட்டத்தில் 201,814 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
201,814 ஐ, 63,630 ஆல் பிரித்தால் வருவது 3.1 அதாவது ஐக்கிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்கள் ஒதுக்கப்படும். மாவட்டத்தில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற கட்சி என்ற வகையில் போனஸ் ஆசனமும் உரித்தாகும். மொத்தம் 4.
ரணிலின் சிலிண்டர் கூட்டணி பெற்ற வாக்குகள் – 138,619 இதனை பிரித்தால் 2 ஆசனங்கள் கிடைக்கப்பெறும்.
தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் 105,057. அக்கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப்பெறும்.
ஒரு ஆசனம் எஞ்சியுள்ளது. எஞ்சிய வாக்குகள் கருத்திற்கொள்ளப்பட்டு 2ஆவது சுற்றி ஆசன பகிர்வு இடம்பெறும்.
இதில் தேசிய மக்கள் சக்திக்கே 41,427 வாக்குகள் எஞ்சியுள்ளன. அந்தவகையில் எஞ்சிய ஆசனம் அக்கட்சிக்கு கிடைக்கப்பெறும். அந்தவகையில் தேசிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெறும்.
(ஜனாதிபதி தேர்தலில் விழுந்த வாக்குகள் பொதுத்தேர்தலிலும் அவ்வாறே விழுந்தால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே இப்பதிவு. ஏற்கனவே கண்டி மாவட்டம் பற்றி எழுதிய பதிவை நுவரெலியா முடிவுகளுக்கமைய மாற்றியுள்ளேன். உங்கள் மாவட்ட கணிப்பையும் இவ்வாறு செய்துகொள்ளலாம்.)
ஜனாதிபதி தேர்தலில் வென்றதரப்புக்கு பொதுத்தேர்தலில் வாக்கு வங்கி அதிகரிக்கும்.
2019 ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு 277, 913 வாக்குகளும், கோட்டாபய ராஜபக்சவுக்கு 175, 823 வாக்குளும் அளிக்கப்பட்டன.
எனினும், 2020 பொதுத்தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச பிரதிநிதித்துவப்படுத்திய மொட்டு கூட்டணிக்கு 230, 389 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து ஆசனங்கள் கிடைத்தன.
ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் 2020 பொதுத்தேர்தலில் சஜித்தரப்பின் வாக்கு வங்கி நுவரெலியா மாவட்டத்தில் 27 வீதத்தால் குறைந்துள்ளது. (277, 913 – 132,008)
அந்தவகையில் பார்த்தால் ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆசனங்களின் எண்ணிக்கை குறையக்கூடும். தேசிய மக்கள் சக்தி பலமான வேட்பாளர்களைக் களமிறக்கும்பட்சத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அக்கட்சிக்குரிய ஆசனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
நுவரெலியா மாவட்டத்தில் தமக்குள்ள இரு ஆசனங்களை தக்கவைக்க இதொகாவும் கடுமையாக போராடவேண்டிய நிலையும் உள்ளது.
ஆர்.சனத்
raasanath@gmail.com