இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி இன்றுடன் ஓராண்டாகின்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் லெபனான்மீதும் இஸ்ரேல் போர் தொடுத்துவருகின்றது. மறுபுறத்தில் ஈரான், இஸ்ரேலுக்கிடையில் எந்நேரத்தில் வேண்டுமானாலும் போர் மூளும் அபாயமும் உள்ளது.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு, கடந்த வருடம் இதே நாளில் முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
ஓக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர்.
இதனால் கோபமுற்ற இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கவும் ஹமாஸை அழித்தொழிக்கவும் பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தீவிரமான போர் தொடங்கி ஒரு வருடம் ஆகிய நிலையிலும், அமைதி எட்டப்படாமல் அண்டை நாடான லெபனானுக்கும் போர் விரிவடைந்துள்ளது.
ஒரு வருடம் பாலஸ்தீனதுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஈரானும் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது. இதற்கிடையே அக்டோபர் 7 தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதே நாளையொட்டி இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை இடைமறித்து அழித்ததாகவும், மற்றவை திறந்த வெளியில் விழுந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி நேற்றைய தினம் ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி பேரணி நடத்தினர்.