400 கோப்புகள்வரை மூடப்பட்டுள்ளன. அவை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி, வழக்கு தொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கள்வர்களை நிச்சயம் பிடிப்போம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ கள்வர்களை பிடித்தீர்களா எனக் கேட்கின்றனர்? நிச்சயம் பிடிப்போம். அவ்வாறு பிடிக்கும்போது புலம்ப மட்டும் வேண்டாம் என கூறிவைக்க விரும்புகின்றேன்.
சுமார் 400 கோப்புகள்வரை உள்ளன. அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பில் நாம் பரிசீலித்தோம். சில கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இறுகியுள்ளன. மேலும் சில கோப்புகள் சிஐடியில் தேங்கியுள்ளன. இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் கோப்புகள் ஸ்தம்பித்துள்ளன. மேலும் சில விடயங்கள் இன்னமும் முறைப்பாடு மட்டத்தில் மட்டுமே உள்ளது.
அனைத்து கோப்புகளையும் மீள திறக்குமாறு (விசாரணை நடத்துமாறு) சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். அத்துடன், வழக்கு தொடுப்பதற்கு ஏற்புடைய வகையில் விசாரணையில் விவரங்களை திரட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நல்லாட்சியின்போது ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, கண்காட்சியாகவே முன்னெடுக்கப்பட்டது. எமது ஆட்சியில் அவ்வாறு நடக்காது. உரிய வகையில் விசாரணை நடத்தப்படும். தரவுகள் உரிய வகையில் திறப்பட்டு, சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு தொடுக்கப்படும்.” – என்றார்.