‘உள்நாட்டு இறைவரித் திணைக்கள வருமானத்தில் 1.3 ட்ரில்லியன் ரூபா பற்றாக்குறை’

2018 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானத்தில் 1.3 ட்ரில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையில்  நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.

வருமான பற்றாக்குறையில் பெரும்பகுதியானவை அரசாங்க நிறுவனங்களினால் செலுத்தப்பட வேண்டியவை என்றும், இவற்றில் சில நிறுவனங்கள் நிலுவைகளைச் செலுத்தக்கூடிய நிதி நிலமையில் இல்லையென சுயாதீன சபை தீர்மானித்திருப்பதாகவும் உள்நாட்டு வரித் திணைக்களத்தின்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த நிறுவனங்கள் குறித்து முழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, உள்நாட்டு வரித் திணைக்களத்தை வலியுறுத்தியது. இந்த வருமானப் பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணம் 3 பில்லியன் ரூபா பெறுமதியான 8060 மறுக்கப்பட்ட காசோலைகள் என்று கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்தது. இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் சி.பி.ஜே.சிறிவர்த்தன மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

2017ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ரமிஸ் என அழைக்கப்படும் ஒன்லைன் முறையொன்றை ஆரம்பித்திருப்பதாகவும், இதன் ஊடாக வரி சேகரிப்பை வினைத்திறனாக மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

குறித்த பொறிமுறை 4 பில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டபோதும் ஒவ்வொரு முறையும் வரி திருத்தங்கள் செய்யும்போதும் ரமிஸ் முறையில் குறித்த மாற்றங்களை மேற்கொள்ள 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது என   பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டியிருந்தனர். எனவே, நிறுவனத்துடன் ஒரு முறை பணம் செலுத்தும் வழிமுறைக்கு வரி திருத்தங்கள் தொடர்பான ஒப்பந்தம் வர வேண்டும் என்று அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பரிந்துரைத்தார்.

எனினும், வரி செலுத்துனர்கள் மற்றும் வரி அறவீட்டாளர்களின் சௌகரியத்தைக் கருத்தில் கொண்டு ஐந்து வருடங்களுக்கு மாறாத வரிக் கொள்கையொன்று வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டிருப்பதாக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல தெரிவித்தார்.

Related Articles

Latest Articles