காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். கெய்ரோவில் நடந்த மாநாட்டில் அவர் இந்த அறைகூவலை முன்வைத்தார்.
2023 அக்டோபர் 7 இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என பலர் கொல்லப்பட்டுவருகின்றனர்.
ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை அழிக்காமல் ஓயமாட்டோம் என இஸ்ரேல் வீர முழக்கமிட்டு வருகிறது.
காசாவில் இதுவரை 42,924 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 100,833 காயமடைந்துள்ளனர். இவர்களில் கை, கால் போன்ற உடல் உறுப்புகளை இழந்தோரும் அடங்குவர்.
இந்நிலையில், காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் எகிப்து, கத்தார், அமெரிக்கா சேர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையை கடந்த ஓராண்டாகவே முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் எகிப்து ஜனாதிபதி அப்தல் ஃபதா அல் சிஸி ஞாயிற்றுக் கிழமை பேசுகையில்,
“காசாவில் இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள முன்மொழிகிறேன். இந்த இரண்டு நாட்களில் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக காசாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் 4 பேரை விடுவிக்கலாம். அதைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு மேலும் சமரசப் பேச்சு முன்னெடுக்கலாம்.” என்றார்.