ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை மையமாக வைத்து, மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக, உக்ரைன் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்தவர், வலேரி ஜலுஷ்னி. ரஷ்யா அந்த நாட்டு மீது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் படையெடுத்து வரும் நிலையில், தொடக்கத்தில் உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டன.
அந்தச் சமயத்தில் ராணுவத் தளபதியாக இருந்த வலேரி, ”ட்ரோன்கள் மற்றும் உயர் ரக ஆயுதங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் மட்டுமே உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய ராணுவத்துடன் போட்டியிட முடியும். மேலும், போரில் வீரர்கள் பற்றாகுறை ஏற்பட்ட நிலையில், வீரர்களை அணிதிரட்ட சட்டமாற்றங்கள் அவசியம்” என ஆளும் அரசுக்கு எதிராக விமர்சித்திருந்தார்.
இதனால் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் அவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து ராணுவத் தளபதி பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது, அவர் இங்கிலாந்துக்கான உக்ரைன் தூதராக உள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், “மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “2024இல் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. 10,000 வடகொரிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் போரில் தாக்குப்பிடித்து இருக்கிறது. ஆனால், போரில் தனியாக வெல்லுமா என்று நம்பிக்கையாக கூறமுடியாது. வடகொரியாவைச் சேர்ந்த வீரர்கள் உக்ரைனுக்கு முன்னால் உள்ளனர்.
உக்ரைனின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். உக்ரைனில் போரை நிறுத்துவதுகூட இன்னும் சாத்தியம்தான். ஆனால் சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதைப் புரிந்துகொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்” என்றார். வலேரி ஜலுஷ்னியின் இந்தப் பேச்சு உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.