” வடக்கு மக்கள் எமக்கு வழங்கிய ஆணை மிகவும் பெறுமதியானது. அதனை உயிர்போல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.”- என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு கிடைக்கப்பெற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைவிட, வடக்கு, கிழக்கு மக்கள் வழங்கிய ஆணைதான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகின்றது. வடக்கு மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயிர்போல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அம்மக்கள் வழங்கிய ஆணை மிக முக்கியமானது. அதனை சிதைக்கும் வகையில் செயற்படக்கூடாது.
மொழிப்பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படுவது அவசியம். வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை எழுத முடியாத சூழ்நிலை உள்ளது. பெயர் பலகைகளில் தமிழ் மொழி பிழையாக உள்ளது. தெற்கிலும் முக்கியமான இடங்களில் தமிழ் மொழி பிரச்சினை உள்ளது. இவை தீர்க்கப்பட வேண்டும்.
காணி பிரச்சினை உள்ளது. அதுவும் நிவர்த்தி செய்யப்படும். பலாலி பகுதியில் ஒரு வீதி திறக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு வீதிகள் உள்ளன. பாதுகாப்பு தரப்புகளுடன் பேச்சு நடத்தி அவற்றையும் திறப்பதற்கு முயற்சிப்போம்.
வடக்கில்தான் மீனவர் பிரச்சினை அதிகமாக உள்ளது. அவற்றை தீர்க்கும் வகையில் இராமாலிங்கம் தோழருக்கு மீன்பிடி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களுக்கு இருக்கும் ஒரு அரசியல் தீர்வுதான் மாகாணசபை. எனவே, நியாயமான தீர்வு முன்வைக்கப்படும்வரை மாகாணசபையில் கைவைக்கப்படமாட்டாது.”-என்றார்.










