காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வருவார்கள் என நம்ப முடியாது என புதிய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்தை இலங்கையின் நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் தாய் வன்மையாக கண்டித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என வீரகேசரி வார இதழின் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கடற்றொழில், நீரியல்வள மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அவர்கள் காணாமல் போனதில் இருந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டதாகவும், அவர்கள் திரும்பி வருவார்கள் என நம்ப முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அது சார்ந்த வழக்குகளை விசாரிக்கவும் சட்டத்தின் முன் நிறுத்தவும் உறுதியளித்துள்ளோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்ட மக்களின் உடல் காயங்களுக்கு மருந்து போடலாம். ஆனால் உள்ளக்காயங்களுக்கு மருந்துபோட இயலாது. போர் முடிவடைந்து 15 வருடங்களாகிறது. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இனியும் வருவார்கள் என நம்பமுடியாது.”

நவம்பர் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘வீரகேசரி’ நாளிழுக்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், ஊகடங்களுக்கு கருத்து வெளியிட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் (ARED) செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் தெரிவித்த கருத்து, 2,837 நாட்களாகத் தொடர்ந்து தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடிக் கொண்டிருக்கும் போரில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கு அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.

“15 வருடங்களாக காணாமல் போனவர்கள் போனவர்கள்தான், அவர்கள் இல்லையென்ற கருத்துப்படி அவர் கூறியிருந்தார். உண்மையாகவே எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் எமக்கு அந்த செய்தி சரியான ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் 15 வருடங்களாக இந்த பிள்ளைகளை தேடி போராடிக்கொண்டிருக்கின்றோம் என்பதைவிட, 2,837 நாட்களாக நாங்கள் ஒரு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 300ற்கும் மேற்பட்ட பெற்றோர் களத்திலே உயிரிழந்துள்ளனர். அப்படியிருந்தும் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றோம்.”

அன்புக்குரியவர்களைத் தேடி போராடி வரும் பெற்றோரின் மன நிலையைப் பற்றி அறியாத அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது அவர்களுக்கு மனவேதனையை அளிப்பதாக சுட்டிக்காட்டிய லீலாதேவி ஆனந்தநடராஜா, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

“இந்த அம்மாக்கள், அப்பாக்கள், மனைவியரின் மனநிலையை அறியாத ஒரு தமிழ் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது மன வேதனையை அளிக்கிறது. ஏற்கனவே நாங்கள் மனத்தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். ஏற்கனவே 15 வருடங்களாக எமது உறவுகளைத் தேடி எவ்வளவு மன உளைச்சல், உடல் வலிமை இழப்பு எவ்வளவு ஏற்பட்டிருக்கும். எனவே இந்த அமைச்சரின் இந்த கூற்றை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.”

பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பு

கடற்றொழில், நீரியல்வள மற்றும் கடல் வள அமைச்சரின் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், அமைச்சர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் செயற்பாடுகளை நினைவு கூர்ந்ததோடு, அவரது கட்சி ஏற்படுத்திய அழிவுகளும் வெளிச்சத்திற்கு வரும் என்பதால் அமைச்சர் இவ்வாறான கருத்தைக் கூறியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் மீண்டு வருவார்கள் என நம்ப முடியாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வீரகேசரி நாளிதழுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் கேள்வியெழுப்பிய யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மனோகரன் சோமபாலன், அமைச்சர் முதலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களே என்றால் இந்த காணாமல் ஆக்கப்படடவர்களுக்கு என்ன நடந்தது என்று நீங்கள் முதல் சொல்ல வேண்டும். கலைப்பீட மாணவர் ஒன்றியத்தை தாண்டி பொறுப்புள்ள ஒரு பிரஜையாக இதனை குறிப்பிடுகின்றேன். அப்படி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது நடந்திருந்தால் அதுத் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட முடியும். அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் அதனுடன் தொடர்புடையவர்கள் கூண்டில் ஏற்றப்படலாம்.”

“அவர் அங்கம் வகிக்கும் கட்சியும் 2009ஆம் ஆண்டு முன்னர் இனப்படுகொலையை செய்த கட்சிதான். அவர்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆகவே தம்முடைய இனப்படுகொலை விவகாரம் வெளியில் வந்துவிடும் என்பதற்காக அவர் அந்த விடயத்தை குறிப்பிடலாம்.” எனவும் மனோகரன் சோமபாலன் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினான்கு பேர் உயிருடன் உள்ளனர்

சுமார் ஏழு வருடங்களாக இயங்கி வரும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம், பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னர் பதினான்கு பேர் உயிருடன் இருப்பதை அண்மையில் கண்டுபிடித்திருந்தது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) உறுப்பினர் தம்பையா யோகராஜா, 2024 நவம்பரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர்கள் குறித்த தகவல்களை தற்போது வெளியிட முடியாது என தெரிவித்திருந்தார்.

“17 பேரின் தலைவிதியை எங்கள் அலுவலகம் உறுதி செய்துள்ளது. அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 14 பேர் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளோம். இந்த 14 பேரும் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். இருப்பினும் அந்தத் தகவலை வெளியிடும் நிலையில் நாங்கள் இல்லை. சம்பந்தப்பட்ட நபர்களின் சம்மதத்தைப் பெற்று தேவையான நடவடிக்கைகளை எடுத்த பின்னர், உரிய தகவல்களை வெளியிடுவோம்.

OMP பிரதிநிதி தம்பையா யோகராஜா கிளிநொச்சியில் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனோர் தொடர்பில் தமது அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

“எமது காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு இதுவரையில் 21,630 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்பப்படிவங்களில் பொலிசார் மற்றும் முப்படையினரதும் விண்ணப்பங்களும் மற்றும் டுப்ளிகேட் பைல்ஸ் இவற்றை கழித்து மிகுதியாக, இதில் 14,988 விண்ணப்ப படிவங்கள், கோவைகள் விசாரணைக்காக எம்மிடம் உள்ளன. அவற்றில் இதுவரை 6,788 கோவைகளின் பூர்வாங்க விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில் 3,800க்கும் மேற்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம், இந்த இடைக்கால நிவாரணம் ரூபாய் இரண்டு இலட்சம், ஒவ்வொரு முறைப்பாட்டாளருக்கும் வழங்கியுள்ளோம்.”

காணப்படாமைக்கான சான்றிதழ் வழங்கப்படுவதன் அடிப்படையில் 3,000ற்கும் அதிகமான சான்றிதழ்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் 2018 பெப்ரவரி 28ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட காணாமற்போனோர் பற்றிய அஅலுவலகம் ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் போனமை தொடர்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles