மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட கோணபிட்டிய தோட்ட மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலை நிறுத்தப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இதுவரை காலமும் நாளாந்த பெயருக்காக 20 கிலோ தேயிலையினை பறித்துவந்த கோணபிட்டிய தோட்ட மக்களை, கடந்த 12 ஆம் திகதி முதல் 23 கிலோ தேயிலையினை பறிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினை தொழிலாளர்களிடம் தோட்ட நிர்வாகம் கொண்டு வந்ததை அடுத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனவே, இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு தெரியபடுத்தியதன் பின்னர், அவரின் ஆலோசனைகளுக்கமைய இ.தொ.காவின் குழு ஒன்றினை தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதற்கமைய, கோணபிட்டிய தோட்ட காரியாலயத்தில் நடைபெற்ற குறித்த இக் கலந்துரையாடலில், தோட்ட முகாமையாளர் ஹிரோமல் குணரத்ன, இராகலை பிராந்திய காரியாலய இயக்குனர் காசிராஜ், வலப்பனை பிரதேச இ.தொ.கா இணைப்பாளர்களான பாலா மற்றும் டட்லி உட்பட தோட்டத் தலைவர், தலைவி உட்பட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இக்கலந்துரையாடலின் போது, கோணப்பிட்டிய தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட தீர்வுகள் பின்வருமாறு…
♦இதன் போது நாளொன்றுக்கு 23 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனையை , 13 ஆம் திகதியிலிருந்து 20 கிலோவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
♦ இதுவரையில் 20 கிலோவிற்கு 4 கிலோ கொழுந்து கழிக்கபட்ட போதும், தற்போது 20 கிலோவிற்கு 2 கிலோ கொழுந்து கழிக்கபட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.
♦கடந்த பதினான்கு வருடங்களாக, 16 தொழிலாளர்கள் தினசரி நாட்கூலியாக வேலை செய்த போதும், தற்போது அவர்கள் தோட்ட பேர் பதிவில் இடம்பெற்றனர்.
♦தோட்ட மக்களின் கோரிக்கைக்கு அமைவாக தோட்ட நலன்புரி அதிகாரியை இடம்மாற்றம் செய்ய வேண்டும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.










