உள்ளாட்சிசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜனவரி 10வரை சபை அமர்வுகள் இடம்பெறும்.
இதன்படி ஜனவரி 7 ஆம் திகதி துறைசார் அமைச்சரால் மேற்படி சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளதெனவும், ஏதெனும் சிக்கல் ஏற்படின் 10 ஆம் திகதிக்குள் அது சமர்ப்பிக்கப்படவுள்ளதெனவும் தெரியவருகின்றது.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக ஏற்கனவே கோரப்பட்டிருந்த வேட்பு மனுக்களை நிராகரித்தது, புதிதாக வேட்பு மனுக்களை கோரும் வகையிலேயே சட்டத் திருத்தம் வரவுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.