எலான் மஸ்க்கின் சல்யூட்டால் வெடித்துள்ள சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைக் கொண்டாடும் நிகழ்வில், நாஜி பாணி சல்யூட் போல ஒரு கை செய்கை செய்ததாக தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களுக்கு பின்பு, ட்ரம்பின் ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றிய எலான் மஸ்க், “நவம்பர் 4-ம் திகதி வெளியான தேர்தல் முடிவு சாதாரண வெற்றி இல்லை. இது மனித நாகரிகப் பாதையில் உள்ள முள்கரண்டி. இது மிகவும் முக்கியமானது, இந்த வெற்றியை சாத்தியமாக்கியதற்கு நன்றி… நன்றி…!” என்று தெரிவித்துள்ளார்.

பின்பு மஸ்க் தனது வலது உள்ளங்கையை இடது மார்பில் வேகமாக அடித்து, பின்பு அனைத்து விரல்களையும் ஒன்றிணைத்து உள்ளங்கை கீழ்நோக்கியபடி கையை மேல் நோக்கி நீட்டினார்.

பின்பு தன்னை எதிர்பார்த்து காத்திருந்தவர்களை நோக்கியும் அதே செய்கையைச் செய்தார்.

இதுகுறித்து நியூயார்கைச் சேர்ந்த ஜனநாயக கட்சியின் ஜெர்ரி நாட்லர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ” ஜனாதிபதியின் பெயரில் நடந்த விழாவில், ஹிட்லர் வணக்கத்தை ஒத்த ஒன்றினை நாம் பார்க்கும் நாள் வரும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த அருவருப்பான செயலுக்கு நமது சமூகத்தில் இடம் இல்லை. மனித வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் இதுவும் ஒன்று. யூத எதிர்ப்பு என்று கூறப்படும் இந்த வெறுக்கத்தக்க செயலை கண்டிப்பதில் என் சகாக்கள் ஒன்று கூட வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஸ்கின் இந்த செய்கையை இஸ்ரேல் ஊடகமும் கண்டித்துள்ளது.

Related Articles

Latest Articles