பங்களாதேசுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவையடுத்து பங்களாதேசுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 20-ம் திகதி பதவியேற்றார். முதல் நாளிலேயே உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது உட்பட் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதுபோல வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி மற்றும் பல்வேறு சர்வதேச நிதியுதவி திட்டங்களையும் 90 நாட்களுக்கு நிறுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல், எகிப்து நாடுகளுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் குறித்தும் மறுஆய்வு செய்து ஜனாதிபதி ட்ரம்புக்கு 85 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை , முகமது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷ் இடைக்கால அரசுக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தி உள்ளது.

ஆசிய நாடுகளிலேயே பங்களாதேஷ்தான் அதிக நிதியுதவியை அமெரிக்காவிடமிருந்து பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த உத்தரவு, அந்நாட்டு அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும் என கருத்தப்படுகிறது.

Related Articles

Latest Articles