எழுத்துமூலம் அறிவிக்குமாறு இழுத்தடிப்பு செய்துகொண்டிருக்காமல் முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்க வீடுகளில் இருந்து வெளியேறுவதுதான் பொருத்தமான நடவடிக்கை. அவ்வாறு இல்லையேல் வெளியேற்றுவதற்கு மாற்று வழிகள் உள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள வீடு விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
” வீட்டை கையளித்துவிட்டு செல்லுமாறு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் வைத்து அறிவித்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரமேதாச வீட்டை ஒப்படைத்துவிட்டார். கோட்டாபய ராஜபக்வும் கையளித்துவிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவும் பயன்படுத்தவில்லை.
மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரே அரச வீடுகளை பயன்படுத்திவருகின்றனர். இவர்களுக்கு பிரத்தியேக சட்டம் தேவையில்லை.
வெளியேறுமாறு கௌரவமாகக் கூறிவிட்டோம். அவ்வாறு செய்வார்கள் என நம்புகின்றோம்.
அரசாங்க வீட்டில் இருந்துகொண்டே எழுத்துமூலம் அறிவிக்குமாறு கோருகின்றனர். முன்னாள் ஜனாதிபதிகள் அவர்கள் வகித்த பதவிநிலை கருதி கௌரவமாக நடந்துகொள்ள வேண்டும். கௌரவமாக வெளியேற வேண்டும். அதைவிடுத்து தொங்கிக்கொண்டிருந்தால் விரட்ட மாற்று வழிகளும் உள்ளன. வீட்டை விட்டு வெளியேறுவதே பொருத்தமான நடவடிக்கை.” – என்றார்.