சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தன என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (28) நடைபெற்ற 2025 வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலமோ, பொதுமக்கள் கிளர்ச்சியை உருவாக்குவதன் மூலமோ, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காணும் கனவுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாகரிகத்திற்கு வழி வகுத்துள்ளது என்றும், முடிந்தால் தற்போதைய அரசாங்கத்தின் நாகரிகத்தை மிஞ்சிச் செல்லுமாறும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சவால் விடுத்தார்.
அவ்வாறு இல்லாமல் பழைய அரசியலிலே இருந்தால் அரசியலை விட்டு விலகுவதை தடுக்க முடியாதெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கை இராணுவத்தையும் பொலிஸையும் தொழில்சார்புடைய இராணுவமாகவும் பொலிஸாகவும் மாற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி, பாதுகாப்பு துறையின் எந்தவொரு இடமாற்றத்தையும் நட்பு மற்றும் அரசியல் அடிப்படையில் செய்யப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
காலத்தால் மறைந்திருக்கும் குற்றச்செயல்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் எடுக்குமெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இம்மாதத்தில் நடந்த ஐந்து குற்றச் செயல்களை விசாரணை செய்யும்போது ஐந்து குழுக்களினால் அந்த குற்றச் செயல்கள் செய்யப்பட்டுள்ளதெனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது தமது பக்கம் விசாரணைகள் வருவதை குற்றச் செயல்களை செய்வோர் அறிந்துகொள்வதாகவும், அவ்வாறு பல குற்றக் குழுக்கள் ஒரே சமயத்தில் இயங்குவது சூழ்ச்சியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சூழ்ச்சியை அறிந்துகொண்டு அதனை முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் சூழ்ச்சிகளால் ஆட்சி மாற்றம் செய்த காலம் முடிந்துவிட்டதாகவும், ஒழுக்கத்தினால் அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகார தரப்பை குற்ற குழுக்கள் அற்றதாக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
……..