நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். 2 ஆயிரத்து 700 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், அதிகளவானோர் காணாமல்போயுள்ளனர். மேலும் பலர் விபத்துக்களில் சிக்குண்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பௌத்த நாடுகள் எனும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேணிவரும் நீண்டகால தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, மியன்மார் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், எமது நாட்டில் பௌத்த பிக்குமார்களால் சேகரிக்கப்படும் பொருட்கள் ரீதியான உதவிகளை விரைவாக மியன்மார் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான அரசதலையீடுகளின் பிரகாரம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மருத்துவர்கள் மற்றும் ஏனைய சுகாதார சேவை ஊழியர்கள் அடங்கிய குழுவொன்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைத்திருக்கின்றோம்.” – என்றார்.










