பிள்ளையானை வரவேற்க பாடசாலை மாணவர்களா? ஆசிரியர் சங்கம் கடும் சீற்றம்!

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன்துறை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) அரசியல் வரவேற்பு நிகழ்வுக்கு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தியமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தமது கடும் எதிர்ப்பை தெரிவித்து கல்வி அமைச்சர் ஜி எல் பீரிசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என்று அச்சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப்  தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் வரவேற்பு நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலை மாணவர்களைப் பாடசாலைச் சீருகையுடன் கலந்துகொள்ள வைத்துள்ளமை ஊடகங்களின் வாயிலாக நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு தெளிவாகக் காணக்கிடைத்தது.

கடந்த சனி அன்று (2020/12/12)மட்டக்களட்பில் இந்த வரவேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளதோடு அன்றைய தினம் பாடசாலை விடுமுறையில் இருந்த பிள்ளைகளை பாடசாலைச் சீருடையோடு அழைத்துவந்து அந்த மாணவர்களின் வாண்ட் (பேன்ட்) வாத்திய வரவேற்புச் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் மூலகாரணமாக இருந்துள்ளார்.

கொலைக்குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்த இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தான் விடுதலையான மகிழ்ச்சியில் மட்டக்களப்பில் இந்த நிகழ்வை நடத்தியிருப்பதோடு அவரை வரவேற்பதற்கு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தியிருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத பிழையாகும். கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் இது ஒரு தவறான முன்மாதிரியாகும்.

இவ்வாறான அரசியல் நிகழ்வுகளுக்குப் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தியமை சம்மந்தமாக எமது சங்கத்தினூடாகக் கடுமையான எதிர்ப்பினை நடப்பு அரசாங்கத்துக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவிக்கிறோம்.

மேலும் நாட்டில் தற்போதுவரை தொடரும் கொரோனா நோய் அச்சுறுத்தல் தொடர்பாக எந்தவொரு அக்கறையுமின்றி கொரோனா சட்ட விதிமுறைகளை மீறி பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப் பட்டுள்ளனர்

இந்த நிகழ்வுக்குப் பாடசாலை மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்குத் தவறான முன்மாதிரியை வழங்கியமைக்கு அதற்குப் பொறுப்பான பாடசாலைப் பிரதானிகள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சிடமும் பொறுப்பு வாய்ந்த கல்வி அதிகாரிகளிடமும் இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம் சார்பாக வலியுறுத்தி நிற்கிறோம் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles