தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் அன்றைய தினமே கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இதன்போது தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் வாக்குறுதி அளித்தார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள், அதன் பின்னணியில் இருப்பவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்று புடின் வலியுறுத்தினார் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் சில நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் தொலைபேசியில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.