மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஒருபோதும் தயாரில்லை என்று தேசிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
உள்ளுராட்சிசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றிருந்தாலும் பெரும்பாலான சபைகளில் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை பெறவில்லை.
இந்நிலையில் சபைகளில் ஆட்சியமைப்பதற்கு எதிரணிகளின் ஆதரவு பெறப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சபையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சிக்கே ஆட்சி அமைப்பதற்குரிய தார்மீக உரிமை உள்ளது. ஆனால் தோல்வி அடைந்த தரப்புகள் எல்லாம் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றி தற்போது கதைக்கப்படுகின்றது. சபையை நிர்வகிக்க வேண்டியது வென்றவர்களா? அல்லது தோற்றவர்களா? மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அதனை செய்ய முடியாது.
எனவே, நாம் வென்ற இடங்களில் சபைகளை ஸ்தாபிப்போம். சுயாதீனமாக இறங்கியவர்கள் உள்ளனர். அவர்கள் விரும்பினால் எமக்கு ஆதரவு வழங்கலாம்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி என்பன மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளாகும். நாட்டை நாமாக்கிய மேற்படி கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க நாம் தயாரில்லை.
சிறப்பான பாதீட்டை முன்வைத்தால் அதனை எதிர்க்க வேண்டிய தேவைப்பாடு எழாது.”- என்றார்.
