மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டால் அவரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னிப்பு கோர வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தங்கக் குதிரை, தங்க மலசலக்கூடம் போன்ற கதையெல்லாம் பொய்யென தற்போது நிரூபனமாகிவருகின்றது. போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கதைகளெல்லாம் போலியானவை மாயையென்பது தெரியவருகின்றது. அவருக்கு சேறு பூசுவதற்காகவே இப்படியான கருத்துகள் பரப்பட்டன.
மஹிந்த ராஜபக்ச என்பவர் குற்றமற்றவர் – சுத்தமானவர் என்பது தற்போது நிரூபனமாகிவருகின்றது. மஹிந்தவுக்கு எதிராக இருப்பதாகக் கூறப்பட்ட கோப்புகள் எங்கே என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்கின்றோம்.
மஹிந்தவுக்கு சீனா பணம் வழங்கியதாகவும், கணக்கிலக்கம்கூட இருப்பதாகவும் அநுர கூறினார்.
கணக்கிலக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கி விசாரணை நடத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் எதையும் செய்யாத மஹிந்த ராஜபக்சவிடம் மன்னிப்பு கோர வேண்டும்.”- என்றார்.
