புலிகளின் ஆயுதம் கொழும்புக்கு வரவில்லை: அர்ச்சுனாவின் கருத்து நிராகரிப்பு!

சுங்கத்திலிருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் இருந்தன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது.

“ சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆயுதங்களோ, தங்கமோ அல்லது போதைப்பொருட்களோ இருக்கவில்லை.” என்று சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ சுங்கத்தில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது. கொள்கலன்கள் தேங்கிக் கிடந்தன. பொருட்கள் விடுவிக்கப்படும் அளவும் குறைவாகவே இருந்தது. இதனால் இறக்குமதியாளர்கள், சாரதிகள ; என பல தரப்பினரிடமும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. விடுவிக்கப்படும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறும் கோரப்பட்டிருந்தது.

சுங்கத்தில் 7 நாட்கள்வரை பொருட்கள் இவ்வாறு தேங்கி இருந்தால் அதன்மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பாரிய பொருளாதார இழப்பும் ஏற்படும். மூலப்பொருட்கள் உள்ளிட்ட விடயங்கள் உரிய நேரத்துக்கு கிடைக்காமல்போகும். இதன்மூலம் ஓடர்கள் இரத்து செய்யப்படும் நிலையும் ஏற்பட்டது.

துறைமுகத்தில் நெருக்கடி நிலை இருந்ததால் சில கப்பல்கள் திரும்பிச்சென்றன. இதனால் நாட்டுக்கும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சுங்கத் திணைக்களத்தால் மேலதிக சுங்க பணிப்பாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. அது அனுபவம் மிக்க குழுவாகும். அக்குழுவின் நிர்ணயங்களுக்கு அமைய, அச்சுறுத்தல் இல்லை எனக் கருதப்படும் கொள்கலன்களை பரிசோதனை இன்றி விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. “ -எனவும் சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட குறிப்பிட்டார்.

தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருட்களே கொள்கலன்களில் இருந்தன. பிளாஸ்டிக், துணி வகைகள், நூல் வகைகள், இரசாயனம், இலத்திரனியல் உபகரணங்கள், விலங்கு உணவு, வாகன உதிரிபாகங்கள், சீமெந்து உள்ளிட்டவையே இருந்துள்ளன. இந்தியா மற்றும் சீனாவில் இருந்தே பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவை தொடர்பான ஆவணங்கள் முறையாக – முழுமையாக சோதிக்கப்பட்டே பொருட்கள் விடுவிக்கப்பட்டன.

எனினும், அவற்றில் ஆயுதங்கள், தங்கம், போதைப்பொருட்கள் இருந்திருக்கக்கூடும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு ஆயுதம், தங்கம், போதைப்பொருள் என்பன இருக்கவில்லை.
சட்டவிரோத பொருட்கள் வந்திருந்தால் உளவுத் தகவல்கள் கிடைத்திருக்கும். திடீர் பரிசோதனையும் இடம்பெறுகின்றது. எனவே, அச்சுறுத்தல் இல்லையெனக் கருதப்பட்ட பொருட்களே விடுவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் எமக்கு சந்தேகம் இல்லை. விசாரணையில் இது உறுதியாகும்.

எனினும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் இவ்விவகாரம் தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ளப்படும். அதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. நிதி அமைச்சால் நியமிக்கப்பட்ட குழுவொன்றும் ஆய்வுகளை நடத்தியுள்ளது. அந்த குழுவுக்கு தகவல்கள் வழங்கியுள்ளோம். சிஐடியினருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குழுவின் நிர்ணயங்களுக்கு அமையவே கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. அழுத்தங்கள் எவையும் பிரயோகிக்கப்படவில்லை.” என சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட மேலும் கூறினார்.

இதேவேளை, இதன்போது அர்ச்சுனா எம்.பியின் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர்,
“அவரின் கருத்து தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்கலாம். புலிகளின் ஆயுதங்கள் இருந்தன எனக் கூறப்படுவதை முற்றாக நிராகரிக்கின்றோம்.” – என்று குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles