“ஆபரேஷன் சிந்தூர் மூலம் அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. ” – என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில்,
எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
“ பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கும் என்ற எண்ணம் பாகிஸ்தான் படைகளுக்கு இருந்தது. அவர்கள் அணு ஆயுத அச்சுறுத்தல்களை தொடங்கினர்.
மே 6 மற்றும் 7 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட இரவில் திட்டமிட்டபடி இந்திய இராணுவம் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்திய ஆயுதப் படைகள் 22 நிமிடங்களுக்குள் துல்லிய தாக்குதல்களை நடத்தி பழிதீர்த்தன.” – எனவும் மோடி குறிப்பிட்டார்.
அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அத்துடன், பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களும் சொத்துகளும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இப்போது வரை அவர்களின் பல விமான தளங்கள் ஐசியுவில் உள்ளன. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தளங்கள் அழிக்கப்பட்டன. இது நடக்கும் என யாரும் கற்பனை செய்து பார்க்கவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக நாம் செய்த தயாரிப்புகள் காரணமாகவே, நமது தாக்குதல்கள் மிகத் துல்லியமாக நடந்தன. இல்லாவிட்டால், நாம் எவ்வளவு இழப்பைச் சந்தித்திருப்போம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் தன்னிம்பிக்கை கொண்ட இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத அமைப்பை அம்பலப்படுத்தின.”- என பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார்.