“ விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு, பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது.
” அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. இது நியாயமற்றது. தேச நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
