பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா ( ஆகியோருக்கு இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், சிரிய ஜனாதிபதி சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, அவர் தங்கியிருந்த ‘போர் சீசன்ஸ்’ (Four Seasons Hotel) ஹோட்டலுக்கு அருகாமையில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக, பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிரிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து பெருமளவில் கரும்புகை எழும்புவதைக் காண முடிந்ததுடன், வாகனம் ஒன்று தீப்பற்றி எரிவதும், வீதியில் இரத்தக் கறைகள் படிந்திருப்பதுமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பாதிப்புகள் குறித்த விபரங்களை சிரிய அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எவ்வித பாதிப்புமின்றி முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகவும், அவரது சிரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் திட்டமிட்டபடி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.










