பெட்ரிசிலோன் அசிடேட் (Prednisolone Acetate) என்ற கண் திரவ மருந்தைப் பயன்படுத்தியதால் கண் பார்வையை இழந்த மேலும் நான்கு நோயாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நுவரெலியா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட சில நோயாளர்களுக்கு, இந்த குறிப்பிட்ட கண் திரவ மருந்தைப் பயன்படுத்தியதன் காரணமாக கண் பார்வை முற்றிலும் பறிபோன அல்லது தொடர்ந்து பார்வை குறைவடைந்து சென்ற சம்பவங்கள் முன்னதாகப் பதிவாகியிருந்தன.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு பார்வையை இழந்த 17 நோயாளர்களுக்கு ஏற்கனவே நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதே காலப்பகுதியில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை தவிர்ந்த, நாட்டின் ஏனைய மருத்துவமனைகளிலும் கண் சத்திரசிகிச்சையின் போது இந்த ‘பெட்ரிசிலோன் அசிடேட்’ மருந்தைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குறித்து ஆராய விசேட தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவினர் நடத்திய சோதனைகள் மற்றும் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், விழிப்புலனை (பார்வையை) இழந்துள்ள மேலும் 04 நோயாளர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த அமைச்சரவை, பாதிக்கப்பட்ட அந்த 4 நோயாளர்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நட்டஈட்டுத் தொகையைச் செலுத்துவதற்குத் தனது உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.










