பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது இதற்குரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று அறிவித்தார்.
ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள்மீது இஸ்ரேல் பிரதமர் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ள நிலையிலேயே, ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறு லேபர் கட்சிக்கு அழுத்தங்கள் அதிகரித்துவருகின்றன. கட்சிக்குள்ளும், வெளியில் இருந்தும் தொடர் கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சிட்சி துறைமுக பாலத்தில் இடம்பெற்ற பாரிய பேரணியாவது இது தொடர்பான தமது முடிவை விரைந்து எடுப்பதற்கு லேபர் அரசை தூண்டியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பிரதமர் அந்தோனி அல்பானீஸி,
‘ பாலஸ்தீனத்தில் அமையவுள்ள எதிர்கால நிர்வாகத்தில் ஹமாஸின் எந்தவொரு பங்களிப்பும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.” – என்று குறிப்பிட்டுள்ளார்.