துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் தரைமட்டம்!

வடமேற்கு துருக்கியில் உள்ள சிந்திர்கி என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மொத்தம் 16 கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், 29 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவியும் இஸ்மிர் ஆகிய நகரங்கள் உட்பட துருக்கியின் மேற்கில் உள்ள பல முக்கிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக இருந்த சிந்திர்கி நகரில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே 81 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நாட்டில் உள்ள அனைத்து மீட்புக் குழுக்களும் உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார். மொத்தம் 16 கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், 29 பேர் காயமடைந்தனர் என்றும் அவர் கூறினார்.

கடந்த 2023-ம் ஆண்டு துருக்கி நாட்டில் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 53,000 பேர் உயிரிழந்தனர். வரலாறு காணாத இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையே புரட்டி போட்டது. . இந்த சூழலில் தற்போது மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles