நேபாளத்தில் இளம் தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல், ஜென் z போராட்டக்காரர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து போராட்டக்காரர்களிடம் அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இந்த நிலையில், நேபாளத்தில் அமைதி திரும்ப போராட்டக்காரர்கள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். அவை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?
பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும்.
குடிமக்கள், நிபுணர்கள், இளைஞர்கள் பிரதிநிதித்துவத்தோடு நேபாள அரசமைப்பை முழுவதுமாக திருத்தி எழுத வேண்டும்.
விரைவில், நியாயமான நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளாக நடந்த ஊழல் குறித்தும், அரசுடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்த வேண்டும். சட்டவிரோத சொத்துகள் தேசிய உடைமையாக்கப்பட வேண்டும்.
அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்கள் தேவை. குறிப்பாக கல்வி, சுகாதாரம், நீதித்துறை, பாதுகாப்பு, தொலைதொடர்பு துறைகளில் சீர்திருத்தம் தேவை. ஆகிய கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.
இதற்கிடையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 19 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் இனியும் வன்முறை சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதில் ராணுவம் கவனமாக செயல்பட்டு வருகிறது.