இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்குரிய ஆஸ்திரேலியாவின் முயற்சியை சீன அரச ஊடகம் கடுமையாக விமர்சித்துள்ளது.
இது இரு முகங்களைக் கொண்ட அணுகுமுறையென சைனா டெய்லி நாளிதழ் ஆசிரியர் தலையங்கள் எழுதியுள்ளது.
சீனாவுடன் பொருளாதார உறவுகளையும், அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகளையும் மேம்படுத்துவதற்கு முற்படும் கன்பராவின் நகர்வு குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே ஆசிரியர் தலையங்கள் தீட்டப்பட்டுள்ளது.
சீனாவிடமிருந்து பொருளாதார நலன்களை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியா மறுமுனையில் சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு கூட்டணியான ஆக்கஸை வலுப்படுத்த முனைகின்றது.
அத்துடன், தென்சீன விவகாரத்தில் பிலப்பைன்சுக்கு ஆதரவாக நிற்கின்றது எனவும் குறித்த பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆஸ்திரேலிய பொருட்கள்மீது சீனா கூடுதல் வரிகளை விதித்தது.
எனினும், இராஜதந்திர மட்டத்திலான பேச்சுமூலம் அந்நிலைமை சீர்செய்யப்பட்டுவருகின்றது. கடந்த ஜுலை மாதம் ஆஸ்திரேலி பிரதமர் அல்பானீஸி, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்டோரிய மாநில பிரிமியர் ஜெசிந்தா ஆலன் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பின்புலத்திலேயே குறித்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.