ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய அரசியல் வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
” நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேவேளை யாழ். மாவட்டத்தையும் கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு வாழும் மக்களுக்கு வருமானம் கிடைக்ககூடிய வழிமுறைகள் உருவாக்கப்படும். குறிப்பாக யாழ். மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளும் கட்டியெழுப்பட்டு வருகின்றன. ” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் போது தமிழ் மக்கள் எமக்கு பேராதரவை வழங்கினர். உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போதும் உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது என்றே சொல்ல வேண்டும். இப்பிரதேசம் எமக்கு முக்கியம். அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
நாம் இவ்வாறு அபிவிருத்தி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில் ஒரு சில அரசியல் பூச்சாண்டிகள், விசர் பிடித்து, விசமத்தனமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நாட்டில் இலஞ்ச, ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. இதனால் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய, வளங்களை கொள்ளையடித்த நபர்களுக்கு மன்னிப்பு கிடையாது. சட்டம் தனக்குரிய கடமையை சரிசர நிறைவேற்றும். அதற்குரிய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வித அரசியல் தலையீடுகளும் நீதித்துறையில் மேற்கொள்ளப்படுவதில்லை.
யாழில். கடவுச்சீட்டு அலுவலகம் அமைந்துவிட்டது. சர்வதேச விமான நிலையம் உள்ளது. சர்வதேச விளையாட்டு மைதானமும் வரப்போகின்றது. இறங்குத்துறைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.” – எனவும் அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.










