வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்றுக் கட்சிகளின் அதிகாரங்களுக்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியத்தைப் பற்றிப் பேசுகின்ற தமிழ்க் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்.
எனவே எல்லாக்கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்று எல்லோரும் கோரிக்கைவிடுகின்ற இந்தச் சந்தர்ப்பத்திலே அதிகாரப் பரவலாக்கலின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்று இந்தியாவும் ஐ.நா. சபையிலே கோரிக்கையை முன்வைத்துள்ளது. மாகாணசபைத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த தேர்தலில் பங்குகொள்ள வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரையிலே ஒற்றுமை இல்லாமை என்பதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படிப்பினையாகக் கற்றுக் கொண்டோம். தமிழ் மக்கள் விரக்தியுடன் ஒற்றுமையான சூழலை எதிர்பார்த்து இருக்கின்றனர். எம்மிடையே ஒற்றுமை இன்மையினாலேயே புதிய நபரைப் புதிய அரசை தெரிவு செய்யவேண்டும் என்ற ரீதியிலேயே நாடாளுமன்றத் தேர்தலிலே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தனர். இதன் காராணமாகவே முன் எப்போதும் இல்லாத வகையிலே வடக்கு- கிழக்குப் பகுதிகளில் தேசியக் கட்சிகளின் பிரதித்துவம் உருவாகியது.
எமது செயற்பாடு கள் வெறுமனவே பேச்சளவில்
காணப்படுமேயானால் எமது மாகாணசபை நிச்சயமாக மாற்றுக் கட்சிகளின் அதிகாரங்களுக்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியத்தைப் பற்றிப் பேசுகின்ற தமிழ்க் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டுச் செல்லும் நிலை ஏற்படும்.
எங்களுடைய மக்களுடைய எதிர்காலம், இனப் பிரச்சினை, எமது மண் பறிபோகாமல் இருக்கவேண்டும் என்றால் அதற்காக ஒன்றுபடவேண்டும். எனவே ஒற்றுமையாக தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்கின்ற கட்சிகளாக இருக்க வேண்டும் – என்றார்.










