பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் எழவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
கல்வி கட்டமைப்பை சீர்குலைத்துள்ள பிரதமர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஆளுங்கட்சி எம்.பியான தேவானந்த சுரவீர மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாட்டுக்கு, மாணவர் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்ககூடிய வகையில் எந்தவொரு கல்வி மறுசீரமைப்பும் இடம்பெறமாட்டாது. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணை என்னவென்பது எமக்கு புரிகின்றது.
அதற்கமையவே எமது செயல்பாடு இடம்பெறும். மக்களுக்கு துளியளவும் துரோகம் இழைக்காத வகையில் அரசாங்கத்தின் பயணம் தொடரும்.
கல்வி மறுசீரமைப்பென்பது காலத்தின் கட்டாய தேவையாகும். எனவே, இது விடயத்தில் குறுகிய நோக்கில் அரசியல் நடத்துவதற்கு எவரும் முற்படக்கூடாது.
நாட்டுக்கு பொருத்தமான கல்வி முறைமையை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் பிரதமரை இலக்கு வைத்து போலி தகவல்களை பரப்புவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆளுங்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும் முற்படுகின்றனர். ஆனால் எதிரணியின் கனவு பழிக்காது.
பிரதமர் பதவி விலகவேண்டிய தேவை எழவில்லை. அவர் பதவி விலகவும் மாட்டார்.” – என்றார்.
