இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் குவிந்தது.
இதையடுத்து, 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார்.அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக, இஷான் கிஷன் ருத்ர தாண்டவமாடி அரை சதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு 122 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் 209 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
