ஜனவரி மாத வருமான இலக்கை 22 நாட்களில் தாண்டியது சுங்கம்

2026 ஜனவரி மாத வருமான இலக்கை, இலங்கை சுங்கம், மாதத்தின் முதல் 22 நாட்களுக்குள் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதத்திற்கான வருமான இலக்காக, 160.2 பில்லியன் ரூபாவை, இலங்கை சுங்கம் நிர்ணயித்திருந்தது.

இருப்பினும், மாதத்தின் 22 ஆம் நாளுக்குள் 175.4 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்டியுள்ளது. இது, சுமார் 9.5% அதிகமாகும்.

டிசம்பரில் பல நாட்கள் வழக்கமான துறைமுக மற்றும் சுங்க நடவடிக்கைகளை பாதித்த சூறாவளியால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, டிசம்பர் முதல் கொள்கலன் வெளியேற்றம் விரைவுபடுத்தப்பட்டது, இந்த வருமான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அதிக இறக்குமதி அளவுகளும் கூடுதல் வருமானத்தில் பங்களித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில், 2,551 பில்லியன் ரூபாவை வசூலித்து, சிறிலங்கா சுங்கம் அதன் வரலாற்றில் அதிகபட்ச ஆண்டு வருமானத்தை பதிவு செய்தது.

இது திருத்தப்பட்ட ஆண்டு இலக்கான 2,241 பில்லியன் ரூபாவைத் தாண்டியது.

2024ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 1,553 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடும்போது 64.2% அதிகரிப்பாக இருந்தது.

2026 ஆம் ஆண்டில், சுங்கம், 2.2 டிரில்லியன் ரூபாவை ஆண்டு வருமான இலக்காக நிர்ணயித்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 13.5% குறைவாகும்.

வாகன இறக்குமதியில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் குறைந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles