மதுவரி வருமான சேகரிப்பை அதிகரிப்பதற்கான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரச வருமான நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருக்கு இடையே கடந்த 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
மதுவரித் திணைக்களத்தின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் வருமான சேகரிப்பை அதிகரிப்பது, இந்தக் கலந்துரையாடலின் முதன்மை நோக்கமாகும்.
டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை, புதிய மறுசீரமைப்புகள் மற்றும் நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
டிஜிட்டல் மயமாக்கல் மூலம் செயற்திறனை அதிகரித்தல், மனிதவள மேம்பாடு மற்றும் அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம். பி. என். ஏ. பிரேமரத்ன உட்பட அதன் சிரேஷ்ட அதிகாரிகள், மதுவரித் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.










