வடக்கு மாகாணத்தில் ‘சேவையின் தேவை கருதி’ ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே, வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றங்கள், தொடர் வேலைத்திட்டங்கள் மற்றும் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், திட்டங்களை முன்னெடுப்பதில் நிலவும் சவால்களை இனங்கண்டு, அவற்றை எவ்வாறு வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன் பின்னர் விசேட கருத்துகளைத் தெரிவித்த ஆளுநர்,
“வழங்கப்பட்ட எந்தவொரு இடமாற்றமும் மேன்முறையீடு காரணமாக நிறுத்தப்பட்டால், அந்த வெற்றிடத்துக்குப் பதிலாக உடனடியாக மாற்று இடமாற்றமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். நடப்பாண்டுக்கான இடமாற்றங்களை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்கத் தவறும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.” – என்று தெரிவித்தார்.
பாடசாலைகளில் இடம்பெறும் சட்டவிரோதப் பண அறவீடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்ட ஆளுநர்,
“இலவசக் கல்வி நடைமுறையில் உள்ளபோதிலும், பாடசாலைகளில் ஏதாவது ஒரு வழியில் மாணவர்களிடம் பணம் அறவிடும் செயற்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது தொடர்பில் எனக்கு தினமும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. சில பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், குறிப்பிட்ட சில பெற்றோர்கள் ஊடாகப் பணத்தை அறவிடும் செயற்பாட்டை முன்னெடுத்துவிட்டு, அதற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என நழுவப் பார்க்கின்றனர். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளுக்குத் திடீர் களப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அங்கு, இருப்பில் பதிவு செய்யப்படாமல் அன்பளிப்புகள் பெறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதிபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இவ்விடயத்தில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரமே இச்சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.” – என்று வலியுறுத்தினார்.
மாகாண மட்டப் பண்பாட்டுப் பெருவிழாவை இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்யும் வகையில், பிரதேச மற்றும் மாவட்ட மட்டப் பண்பாட்டுப் பெருவிழாக்களை முன்கூட்டியே நடத்தி முடிப்பதற்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உரிய நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
மேலும், எதிர்வரும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, ‘வர்ண இரவு’ விருதுகளுக்கான பரிசுத் தொகைகள் தொடர்பில் அனைத்துத் தரப்பினருடனான விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளரைக் கேட்டுக்கொண்டார்.
சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிரான விசாரணைகளைக் காரணம் காட்டி அவர்களின் ஓய்வூதியம் இழுத்தடிக்கப்படுவது தொடர்பிலும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
“தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. எனினும், எவ்விதத் தவறுகளும் இழைக்காதவர்கள் தமக்குரிய காலத்தில் எவ்விதத் தாமதங்களுமின்றித் தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.” – என்றும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர், விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.










