ஹேவாகம தோட்ட மாணவர்கள் எதிர்நோக்கும் கல்வி ரீதியிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பாதுக்கை ஹேவாகம தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான கும்பாபிஷேம் நேற்று (25) இடம்பெற்றது. அந் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
மலையக மக்கள் இலங்கையின் 14 மாவட்டங்களில் வாழ்கிறார்கள். அதில் கொழும்பு மாவட்டமும் உள்ளடங்குகிறது.
கொழும்பு எனும்போது அது தலைநகர் என்றும் அங்குள்ள மக்களுக்கு பிரச்சினைகள் கிடையாது என்றும் ஒரு தோற்றப்பாடு உண்டு. ஆயினும் இங்கு வசிக்கின்ற மலையக மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவருகிறார்கள்.
ஹேவாகம தோட்டம் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தது. இங்கு பாடசாலைக் கல்வியை தொடர்வதில் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக மக்கள் என்னிடம் கூறினார்கள். அவ்வாறான கல்வி ரீதியிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும்.
மேல் மாகாண பாடசாலைகள் பற்றிய கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஹேவாகம தோட்ட மாணவர்களுக்குரிய கல்வி வசதிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
அதேவேளை, இங்கு இயங்கிவந்த அறநெறிப்பாடசாலையை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக தோட்டத்தில் உள்ள கட்டடம் ஒன்றைப் பெற்றுத்தருவதற்கு நாம் அமைச்சு என்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்.
நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதன் ஊடாக மாணவர்கள் தவறான வழிசெல்வதிலிருந்து தவிர்த்துக்கொள்ள முடியும். ஆதலால் இங்கு அறநெறிப்பாடசாலையை மீள ஆரம்பிக்க தோட்ட நிர்வாகமும் ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், அரசாங்கத்தினால் கட்டப்படும் வீடுகளில் ஹேவாக தோட்டத்துக்கு மேலதிக வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நான் பரிந்துரை செய்யவுள்ளேன்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நாம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம். ஆயினும் விமர்சனம் செய்பவர்கள் அரசாங்கத்தின் நன்மை பயக்கும் திட்டங்கள் பற்றியும் பேச வேண்டும்.
