சுரேஷ் சாலேயை நீதிமன்றில் முன்நிறுத்த உத்தரவு

குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக்காவலில் உள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை, ஏப்ரல் 22 ஆம் திகதி, நீதிமன்றத்தில் முன்னிறுத்த, கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேக நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தாலும், இந்த வழக்கில் ஒரு சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிவான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, அங்கிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், அவரைச் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியதாகவும், ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles