ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் 2008-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்கள் எடுத்த நிலையில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நந்த்ரே பர்கர் பந்தில் போல்டானார். மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 11 பந்துகளில், 6 ரன்கள் எடுத்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் போல்டானார்.
இதையடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே, நந்த்ரே பர்கர் வீசிய பவுன்ஸர் பந்தை விளாச முயன்றார். ஆனால் பந்து கையுறையில் பட்டு விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் மட்டையை சுழற்றினார். நந்த்ரே பர்கர் வீசிய ஓவரில் மிட்விக்கெட் திசையில் பவுண்டரியையும், பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸரையும் அடித்து அசத்தினார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய மேத்யூ ஷார்ட் 7 பந்துகளில், 2 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் நின்ற ஜெய்ஸ்வாலிடம் எளிதாக பிடிகொடுத்து நடையை கட்டினார். பவர்பிளேவில் சிஎஸ்கே 41 ரன்கள் சேர்த்தது. 7-வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தி சிஎஸ்கேவின் நெருக்கடியை அதிகரித்தார்.
சர்ஃபராஸ் கான் 12 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தை ஸ்வீப் ஷாட் விளையாட முயன்று எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 3-வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட நிலையில் கடைசி பந்தை விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசையில் ரவி பிஷ்னோயிடம் கேட்ச் ஆனது. ஷிவம் துபே 4 பந்துகளில், 6 ரன்கள் சேர்த்தார்.
சீராக ரன்கள் சேர்த்து வந்த கார்த்திக் சர்மா 15 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் பிரிஜேஷ் சர்மா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஐபிஎல் தொடரில் பிரிஜேஷ் சர்மாவுக்கு இது முதல் விக்கெட்டாக அமைந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நூர் அகமது 1 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்திலும், மேட் ஹென்றி 5 ரன்னில் ரவி பிஷ்னோய் பந்திலும் நடையை கட்டினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்த போதிலும் மறுமுனையில் சீராக ரன்கள் சேர்த்தார் ஜேமி ஓவர்டன். இதனால் சிஎஸ்கே 17.1-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது.
சிறப்பாக விளையாடி வந்த ஜேமி ஓவர்டன் 36 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். முடிவில் 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு சிஎஸ்கே அணி ஆட்டமிழந்தது. அன்ஷுல் கம்போஜ் 7 ரன்கள் சேர்த்தார். கடைசி விக்கெட்டுக்கு ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் ஜோடி 33 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
128 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணி 12.1 ஒவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், ரியான் பராக் 11 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னதாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், துருவ் ஜூரெல் 9 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 18 ரன்களும் எடுத்து அன்ஷுல் கம்போஜ் பந்தில் ஆட்டமிழந்தனர். 47 பந்துகளை மீதம் வைத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல் அணி 2 புள்ளிகளை பெற்றது.
