மலையக விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஜனாதிபதி பணிக்குழுவின் செயலாளராக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியினர்- ஜனாதிபதி சந்திப்பை அடுத்து ஊடகங்களின் ஊடாக அறியக் கிடைக்கிறது.
மலையக மக்களின் விவகாரங்களுக்காக ஜனாதிபதி அலுவலக பிரதானியே நியமனம் பெறுவது வரவேற்கத்தக்கது. ஆனாலும் இந்த நியமனத்தை உத்தியோகபூர்வ அறிவிப்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட வேண்டும் என மலையக அரசியல் அரங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அரங்கம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உயர் அரச நிர்வாக அதிகாரியான பிரபாத் சந்திரகீர்த்தி பதுளையைச் சேர்ந்தவர். கடந்த ஆட்சியில் தொழில் ஆணையாளராக இருந்தவர். தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைந்ததும் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
எனவே மலையக மக்கள் குறித்து நன்கு அறிந்தவராவார். ஆனாலும் இவரது காலத்திலேயே மலையக அதிகார சபையைக் கலைப்பதற்கான செயலாளர் மட்ட பரிந்துரைப்பும் செய்யப்பட்டது.
இதன் போது எமது அரங்கத்தின் செயலதிபர் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, தனிப்பட்ட முறையில் உரையாடிய தருணத்தில் தாம் கலைப்பதில்லை எனும் நிலைப்பாட்டை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் தித்வா புயலனர்த்த காலத்தில் பிரபாத் சந்திரகீர்த்தி அமைச்சு செயலாளர் பதவிக்கு மேலதிகமாக அத்தியாவசிய சேவை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இதன்போது அனர்த்த காலத்தின்போதாவது மலையக மக்களுக்கு என சிறப்பாக உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபையை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியதுடன், அதிகார சபைக்கு பொறுப்பான அமைச்சு செயலாளர் என்ற வகையில் அரங்கத்தினால் இவருக்கும் பிரதி அனுப்பப்பட்டது. எனினும் இரண்டு தரப்பிலும் அதற்கு பதிலேதும் கிடைக்கப்பெறவும் இல்லை.
இந்தப் பின்னணியிலேயே பிரபாத் சந்திரகீர்த்தி ஜனாதிபதியின் மலையக விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இலங்கையின் சட்டவாக்கத்துறையான பாராளுமன்றத்துக்கு நிகராக நிறைவேற்றுத் துறைக்கு பொறுப்பாக ஜனாதிபதியும் அவரது செயலகமும் தொழிற்படுகிறது. இந்தப் பின்னணியில் ஜனாதிபதி செயலகத்தின் ஆளனிகளின் பிரதாணியே மலையக மக்களின் விவகாரங்களுக்கான ஜனாதிபதி இணைப்பாளராக நியமனம் பெற்றிருப்பாராயின் அது வரவேற்கத்தக்கது.
ஆனாலும் அந்த நியமனம் ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதா? என்பதை ஜனாதிபதி செயலகம் உறுதி செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலமாக அரங்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










