“Battle of Little England” கிண்ணம் – காமினி தேசிய பாடசாலைக்கு வெற்றி!

பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியும் காமினி தேசிய பாடசாலை அணியும் இணைந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக நடத்திய “Battle of Little England” கிண்ணப் போட்டி, நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் மூன்று நாள் கொண்ட கடின பந்து கிரிக்கெட் போட்டியாக, நடைபெற்றது.

போட்டியின் இரண்டாவது நாள் காலை 9.50 மணியளவில் ஆரம்பமானது. முதல் நாள் முடிவில் காமினி தேசிய பாடசாலை அணி விக்கெட் இழப்பின்றி 48 ஓட்டங்களுடன் இருந்தது. இரண்டாவது நாளில் அவர்கள் ஆட்டத்தை தொடர்ந்தபோதும், மழை குறுக்கீட்டினால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாள் முடிவில் காமினி தேசிய பாடசாலை அணி 5 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் சடேவ் 51, தஹம் செனவிரத்ன 42 மற்றும் அணித்தலைவர் சய கீதாஞ்சன 42 ஓட்டங்கள் எடுத்தனர்.

பந்துவீச்சில் பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியின் சார்பாக அணித்தலைவர் செபஸ்டியன் 2 விக்கெட்டுகளையும், டிலுஷன், யதுசன் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மூன்றாவது நாள் காலை 9.30 மணிக்கு போட்டி மீண்டும் ஆரம்பமானது. காமினி தேசிய பாடசாலை அணி தமது முதல் இன்னிங்சை இடைநிறுத்தி, பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணிக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்க வாய்ப்பு வழங்கியது.

இதன்போது பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்கள் பெற்றது. ரிஷாந்தன் 54 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஸ்கோர் செய்தார்.

பந்துவீச்சில் காமினி தேசிய பாடசாலை அணியின் சார்பாக தனுஜன் மற்றும் நிமேஷ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, காமினி தேசிய பாடசாலை அணிக்கு 73 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பாடிய அவர்கள் எந்தவித விக்கெட் இழப்பும் இன்றி இலக்கை எளிதில் அடைந்தனர்.

இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான “Battle of Little England” கிண்ணத்தை காமினி தேசிய பாடசாலை அணி கைப்பற்றியது.

விருதுகள்:

சிறந்த துடுப்பாட்ட வீரர் – ரிதுர்சான் (பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி)
சிறந்த பந்துவீச்சாளர் – தனுஜன் (காமினி தேசிய பாடசாலை)
சிறந்த களத்தடுப்பாளர் – சதுர்ஸ்வரன் (பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி)
வளர்ந்து வரும் வீரர் – அஸ்வின் (பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி)

— கஜரூபன் திவ்யா, நுவரெலியா

Related Articles

Latest Articles