வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு: எரிவாயு விலையும் எகிறியது!!

இலங்கையில் நேற்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய லிற்றோ மற்றும் லாப்ஸ் LAUGFS கேஸ் நிறுவனங்கள் புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளன.

இதற்கமைய 12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயு விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 4,765 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,5 கிலோ லிற்றோ எரிவாயு விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1910 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ எடையுடைய லிற்றோ எரிவாயு விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலையாக 890 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 12.5 கிலோ எடையுடைய எரிவாயு விலை 1,070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 5,700 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையும் 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 2,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழலால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

இதனால் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அனைத்து நாடுகளிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சில நாட்களுக்கு முன்னரே எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டன. இந்நிலையிலேயே சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உணவு பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயு விலையேற்றமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இது தொடர்பான அறிவித்தலை சம்பந்தப்பட்ட துறைகளில் வெளியிடவுள்ளன.

Related Articles

Latest Articles