NDB வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது என அரசாங்க நிதி பற்றிய குழுவிடம், மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் ஏப்ரல் 07ஆம் திகதி கூடியது.
இக்குழுக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்க, அதன் ஆளும் சபை, நாணயக் கொள்கைச் சபை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மத்திய வங்கி, நாடாளுமன்றத்துக்கு விளக்கத்தை வழங்க வேண்டும் என்ற சட்டரீதியான ஏற்பாட்டுக்கு அமைய இக்கூட்டம் இடம்பெற்றது.
பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, எம்.எம்.எம்.அஸ்லம், நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்த விடயங்களுக்கு முன்னுரிமையளித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
இப்பிரச்சனையின் தீவிரத்தையும், உடனடிக் கவனம் தேவை என்பதையும் வலியுறுத்திய அரசாங்க நிதி பற்றிய குழு, இது பற்றி மத்திய வங்கியுடன் விரிவான கலந்துரையாடலை முன்னெடுத்தது.
குறித்த மோசடி தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் குழுவுக்கு அறிவித்தார்.
தேவையான தகவல்கள் திரட்டப்பட்டவுடன், மத்திய வங்கி கூடிய விரைவில் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று அவர் மேலும் உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்ட வங்கியில் நிறுவன ஆளுகையில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளும், இலங்கை மத்திய வங்கியின் தொடர்புடைய துறைகளின் மேற்பார்வையில் குறைபாடுகளும், முக்கியத் தகவல்களை அறிக்கையிடுவதில் தேவையற்ற தாமதங்களும் காணப்பட்டமை புலப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது.
இத்தகைய குறைபாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனச் சுட்டிக்காட்டிய குழு, இவற்றை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
முழுமையான பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, இந்த விவகாரத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, கடுமையான மேற்பார்வையை மேற்கொள்ளும் குழு வலியுறுத்தியது.










