ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய துணை ஜனாதிபதி!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜனாதிபதிஅலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமோக வரவேற்பளித்ததுடன், இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்றமைக்காக சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதுவே இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் எனக் குறிப்பிட்ட இந்திய துணை ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் தொடர்பில் தனது நன்றியினைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது

பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, முதலீடு மற்றும் வர்த்தகத் துறைகளிலும், குறிப்பாக வலுசக்தி பாதுகாப்பு மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இந்திய துணை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய அரசின் ஆதரவுடன் இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் குறித்தும், டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிப் பொதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அவசர நிலைமைகளுக்கு மேலதிகமாக, அண்மையில் தான் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போதும், பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும் எட்டப்பட்ட புரிந்துணர்வுக்கு ஏற்ப, இந்தியா தற்போது இலங்கைக்கு வழங்கும் பொருளாதார மற்றும் சமூக ரீதியான அனைத்துத் துறைசார்ந்த ஒத்துழைப்புகளும் விரிவடைந்துள்ளதாகவும், அதன்படி தற்போது பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் மூலம் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், டித்வா சூறாவளியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய சிறப்பான ஆதரவை இங்கு பாராட்டிய ஜனாதிபதி, இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்காக நிதி ஒதுக்கீடு செய்தமைக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.

அதேபோன்று, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்ட வலுசக்தி நெருக்கடியின் போது, இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை அனுப்புவதற்கு இந்தியா எடுத்த நடவடிக்கையையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்

தொழில்நுட்ப ரீதியாக இந்தியா அடைந்துள்ள சிறப்பான வெற்றிகளை இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அந்தத் துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட இலங்கை எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக, மனிதவள அபிவிருத்தி மற்றும் அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்தல் வேலைத்திட்டங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

மீனவர் பிரச்சினைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு, அதற்கு நீண்டகால நிரந்தர தீர்வைக் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தியத் தூதுக்குழுவின் சார்பில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி கே. லக்ஷ்மண், கலாநிதி மேதா விஷ்ரம் குல்கர்னி, வெளியுறவு அமைச்சின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஆர்.கே. லெனகல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles