பெ.முத்துலிங்கம்
படம் – செல்வராஜா ராஜசேகர்
நன்றி – மாற்றம்
டித்வா அனர்த்தம் நடந்தேறி நான்கு மாதங்கள் கடக்கும் வேளையில் புயலினால் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்களுக்கும் ஏனையோருக்கு வழங்கும் ஐந்து மில்லியன் ரூபா நிதியும் வீடு நிர்மாணிப்பதற்காக 10 பேர்ச் காணியும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டித்வா அனர்த்தம் நிலவிய ஒரு சில தினங்களில் அரசாங்கம் வீடுகளை இழந்தவர்களுக்கும் அரைவாசி பாதிப்புற்ற வீடுகளுக்கும், வாழவே முடியானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு ஐந்து மில்லியன் ரூபா அரசாங்கம் வழங்கியது. ஆனால், இந்நிவாரணம் தோட்ட லயன் வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இப்பிரச்சினை தொடர்ந்து நீடித்ததுடன் மலையக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளும், பாதிப்பிற்கு உட்பட்ட மக்களும் காணியும் நிதியும் மலையக மக்களுக்கும் வழங்குங்கள் என ஆர்ப்பாட்டங்களையும் ஏற்புரையும் செய்து வந்தமையினால் ஏப்ரல் 6ஆம் திகதி நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பின்வரும் தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
“தோட்டக் கம்பனிகளினால் நிர்வகிக்கப்படுகின்ற தோட்டங்களில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் வீடுகள் டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வேறு இயற்கை அனர்த்தங்களால் முழுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியமை, மண்சரிவு அதி ஆபத்துக்குள்ளாகியமை, பகுதியளவில் பாதிப்படைந்து அவற்றின் பயன்பாட்டுக்காலம் முடிவடைந்தமை உறுதிப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மற்றும் வீட்டுத்திட்ட வரைப்படத்திற்கமைய 650 அடி சதுர வீடொன்றை அமைப்பதற்காக கட்டம் கட்டமாக 05 மில்லியன் ரூபா அரசு வழங்கி அவ்வாறான தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
குறித்த தொழிலாளிக்கு அவர்கள் வசித்து வருகின்ற தோட்டத்திலேயே பாதுகாப்பான இடத்தில் 10 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை அந்தந்த தோட்டக் கம்பனிகளால் வழங்குவதற்கும் தோட்டத் தொழிலாளர்களின் சேவை தொடர்ந்து தேவையில்லையென தோட்டக் கம்பனி தீர்மானிக்கின்ற போது தொழிலாளியிடமுள்ள காணியில் அல்லது வழங்கப்படுகின்ற 05 மில்லியனில் காணியொன்றைக் கொள்வனவு செய்து வீட்டை அமைப்பதற்கும் உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் வசதியளிக்கப்படும். அதற்கமைய ஜனாதிபதியும் பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.”
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தாமதித்தேனும் அரசாங்கம் 10 பேர்ச்சர்ஸ் காணித்துண்டும் 05 மில்லியன் நிதி வழங்க முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
ஆனால், அரசாங்கம் கம்பனிகளின் கருத்தினை ஏற்று மலையக மக்களின் இருத்தலுக்கு ஆப்பு வைக்க முனைந்துள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். அதாவது, தோட்டத் தொழிலாளர்களின் சேவை தொடர்ந்து தேவையில்லையென தோட்டக் கம்பனி தீர்மானிக்கின்ற போது, தொழிலாளியிடமுள்ள காணியில் அல்லது வழங்கப்படுகின்ற 05 மில்லியனில் காணியொன்றைக் கொள்வனவு செய்து வீட்டை அமைப்பதற்கும் உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் வசதியளிக்கப்படும் என அறிவித்துள்ளமையானது தோட்டக் கம்பனிகளுக்கு தோட்டத்தில் பணிபுரியாத குடும்பங்களை வெளியேற்ற ஒரு தலைப்பட்சமான அதிகாரத்தினை வழங்கியுள்ளது.
இதன்படி தோட்டக் கம்பனிகளுக்கு டித்வா புயலினால் பாதிப்படைந்த தோட்டத்தில் பணியாற்றாத குடும்பங்களை வெளியேற்ற அதிகாரம் வழங்கிய போதிலும் நாளடைவில் இதே அதிகாரத்தை தோட்டத்தில் பணிபுரியாத அனைத்து குடும்பங்களையும் வெளியேற்றம் செய்யும் தோட்டக் கம்பனிகள் முனையும்.
தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டதிலிருந்து தோட்டத்தில் பணிபுரியாத குடும்பங்களை வெளியேற்ற தோட்டக் கம்பனிகள் பலமுறை முயற்சித்தபோதும் தொழிற்சங்கங்களும் பின்னாட்களில் சிவில் அமைப்புகளும் பலமாக எதிர்த்தமையினால் காலத்திற்குக் காலம் எடுக்கப்பட்ட முயற்சிகள் கைவிடப்பட்டன. தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அன்றைய வெள்ளையர் கம்பனிகள், தொழிலாளர்கள் தோட்டத்தில் பணிபுரிய முடியாத நிலைக்கு தள்ளப்படும் வேளை அவர்களை தோட்டத்தை விட்டு வெளியேற்றின.
மேலும் குறிப்பிட்ட தொழிலாளி குடும்பஸ்தராயின் அவரின் குடும்ப அங்கத்தவர்களை பணிபுரிய வைப்பதன் மூலம் வெளியேற்றுவதை நிறுத்தின. சில வேளைகளில் தோட்டத்துரை விரும்பாவிடின் முழு குடும்பத்தையும் தோட்டத்தை விட்டு வெளியேற்றுவார். இவ்வாறு வெளியேற்றம் செய்யும் சம்பவத்தை ‘கொண்டி பட்டம் அடித்தல்’ என தோட்டத் தொழிலாளர் அன்று கூறுவர். தோட்டத்துரை காவல்காரனை அனுப்பி குறிப்பிட்ட தொழிலாளியின் லயக் காம்பிராவுக்கு கொண்டி பட்டம் அடிக்கச் செய்துவிட்டால் குறிப்பிட்ட தொழிலாளி குடும்பத்தினர் உடனே தோட்டத்தை விட்டு வெளியேறி விடவேண்டும். தோட்டத்தில் வேறு யாரும் அக்குடும்பத்திற்கு தற்காலிகமாக தங்க அனுமதிக்க முடியாது. சிலவேளை குறிப்பிட்ட தொழிலாளி வெளியேற மறுத்தால் பொலிஸாரைக் கொண்டு வெளியேற்றுவர்.
இவ்வாறு குடும்பத்துடன் வெளியகற்றல் பெரும்பாலும் தோட்டத்துரையுடன் முரண்படும் தோட்டத் தலைவர்களுக்கே நடைபெறும். இவ்வெளியேற்றம் ஐ.எல்.ஓ. சமவாயம் 110 இன் படி சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகும். அதாவது, ஐ.எல்.ஓ. சமவாயத்தின் படி தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தில் பணியாற்றும் வரை தோட்டக் குடியிருப்புகளில் இருக்கலாம். பணியில் இருந்து நீங்கியவுடன் தோட்டத்தினை விட்டு வெளியேறிவிடவேண்டும். இதன்படி இலங்கையிலும் தோட்டக் குடியிருப்பு கட்டளைச் சட்டம் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலை 1970 ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.
அக்கொடுங்கோண்மை சட்டத்திற்கு எதிராக மலையக தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பி வந்ததுடன் 1970 ஆண்டு ஆட்சி பீடமேறிய இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1971ஆம் ஆண்டு தோட்டக் குடியிருப்பு சிறப்பு சட்டத்தை [Estate Quarters (Special Provisions) Act no.2 of 1971] அறிமுகப்படுத்தியது. இச் சிறப்புச் சட்டத்தின் படி தொழிலாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றால் அவரையும் அவரது குடும்பத்தினரையும் உடனே வெளியே அனுப்ப முடியாது . அவருக்கான கொடுப்பனவு வழங்கும் வரைக்கும் அவரது குடும்பத்தினருக்கு இருக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.
(Where the services of any person who is an employee and estate and who is provided with quarters on the estate are terminated by the employers, whether with or without notice, then notwithstanding the termination of the such services, such person shall (a) have the right to occupy such quarters together with his defendants until he is ejected therefrom on a decree of a court of competent jurisdiction) எனும் உரிமை வழங்கப்பட்டது. இதனால் உடனடியாக கொண்டி பட்டம் அடித்து வெளியேற்றம் சம்பவங்கள் குறைந்தன. எனினும், அவ்வப்போது இச்சட்டம் மீறப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் செல்வதற்கு வேறு இடங்கள் இல்லாமையினாலும் தோட்டத்தில் தலைமுறை தலைமுறையாக வேலை செய்தமையினாலும் ஓய்வுப் பெற்ற பின் அவர்களை தோட்டத்திலிருந்து வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வந்தன.
இப்பின்புலத்தில் 1991ஆம் ஆண்டு தோட்டங்கள் தனியார்மயமாக்கலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது தோட்டவாழ் மலையக மக்களது வீட்டுப் பிரச்சினை கருத்தாடலில் முக்கியத்தும் பெற்றன. தொழிற்சங்கங்கள் இவர்களது வீட்டுரிமை தொடர்பாக குரரெழுப்பின. தோட்ட லயன் குடியிருப்புகளும் அவர்கள் பயன்படுத்தி வரும் காய்கறி தோட்டங்களையும் அவர்களுக்கே உரித்தாக்க வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்தன.
இப்பின்புலத்தில் 1991ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 12ஆம் திகதி கூடிய அமைச்சரவை தோட்டக் குடியிருப்புகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது என தீர்மானித்துடன் லயன் குடியிருப்பிற்கு மேலதிகமாக காணியை ஒதுக்கி அரசிற்கு அப்பகுதியை சொந்தமாக்கி குடியிருப்பாளர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் அதன் பராமரிப்பை வழங்குவது எனும் தீர்மானத்தை மேற்கொண்டது
(All the line rooms with an adequate piece of land were separated from the estate and kept as a separate property of the state without being given to the new plantation management. Consequently, the responsibility of maintained of these line rooms has been passed on the individual occupant with the intention of granting ownership to the individual occupants). அதேவேளை, தோட்டக் குடியிருப்புகளை உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் கொண்டுவரும் தீர்மானத்தையும் காணிகளை குடியிருப்பாளருக்கு அல்லது கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக்கும் தீர்மானத்தை மேற்கொண்டது (Estate settlement will consists of privately co-operatively held housing units on lands belonging to the house owners or co-operatives. These settlements will eventually be integrated in the administration system of local government). இவ்வமைச்சரவை தீரமானத்தை கொண்டுவருவதில் ஜே.ஆர். அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராகவிருந்த திரு. சௌம்மியமூர்த்தி தொண்டமான் பெரும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது. ஆயினும், தோட்டங்களின் முகாமைத்துவத்தை ஏற்ற தனியார் கம்பனிகள் தோட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற குடும்பங்களை 1993ஆம் ஆண்டு வெளியேற்ற முயன்றன. அப்போது அமைச்சராக இருந்த திரு. சௌம்மிய மூர்த்தி தொண்டமான் தலையிட்டு அம்முயற்சியயை சுற்று நிருபம் ஒன்றை தோட்டதுறை அமைச்சின் மூலம் தோட்டக்கம்பனிகளுக்கு அனுப்பச் செய்ததன் மூலம் அதனை தடைசெய்தார். அச்சுற்று நிரூபத்தின்படி தோட்டத் தொழிலாளி ஒய்வுபெற்றால் அக்குடும்பத்தினர் விரும்பி செல்லும் வரை வெளியேற்றப்படக் கூடாது என சொல்லப்பட்டது. இத்துடன் இப்பிரச்சினை முடிவிற்கு வரவில்லை.
2005ஆம் ஆண்டு தோட்டத்துறை அமைச்சின் உயர் அதிகாரியாகவிருந்த அபேனந்த டயஸ் என்பவர் பொகவந்தலாவ என்பீல்ட், இன்ஜேஸ்வரி, ஸ்டெம்போர்ட்ஹில் முதலிய தோட்டங்களில் வீடு கட்டியிருந்த நான்கு தொழிலாளர் குடும்பங்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அம்முயற்சியும் தொழிற்சங்க, சிவில் அமைப்புகளின் எதிர்ப்புக்கு மத்தியில் கைவிடப்பட்டது. குறிப்பிட்ட உயர் அதிகாரி அரச காணிகளை மீளப்பெறும் 1979ஆம் ஆண்டின் இலக்கம் 07 சட்டத்தின் படியே தோட்டத்தை விட்டு வெளியேறும் படி அனுப்பியிருந்தார். இதேபோல் அதே ஆண்டு லபுக்கலை தோட்ட அதிகாரி தோட்டத்தில் வீடு கட்டி வாழ்ந்த ஒன்பது இளைஞர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்து தோட்டத்திலிருந்து வெளியேறும்படி நோட்டீஸ் அனுப்பினார். அவ்விளஞர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையின் கீழ் இயங்கிய தொழிற்சங்கம் முன்னெடுத்த நடவடிக்கையினால் அவ்விளைஞர்களுக்கு தாம் கட்டிய வீட்டிலேயே வாழ அனுமதிக்கப்பட்டது.
இவ்வரலாற்று பின்புலத்துடன் பார்க்கையில் மலையக மக்களுக்கு காணி வழங்குவதாகக் கூறும் அரசு ஓய்வு பெறும் மலையகத் தொழிலாளிகளையும் தோட்டத்தில் பணிபுரியாது வாழும் தோட்டத் தொழிலாளர்களின் வாரிசுகளை 05 மில்லியன்களைக் கொடுத்து வெளியேற்றும் உரிமையை தோட்டக் கம்பனிகளுக்கு வழங்க முன்வந்துள்ளமையானது மலையக மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது.
கம்பனிக்கு வழங்கப்பட்ட இவ்வுரிமை சட்டரீதியாக ஆக்கப்பட்டால் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டோருக்காக மேற்கொள்ளும் நடவடிக்கை நாளடைவில் தோட்டத்தில் பணியாற்றாத சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 05 மில்லியன்களைக் கொடுத்து தோட்டத்தில் பணியாற்றாத குடும்பங்களை வெளியேற்றும். 2024ஆம் ஆண்டின் தரவுகளின் படி சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களே நிரந்தரத் தொழிலாளர்களாக தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். அதேவேளை, தோட்டங்களில் 02 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. அப்படி பார்க்கும்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் இவ்வபாயத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, இவ் அமைச்சரவை தீர்மானத்தில் – தோட்டத் தொழிலாளர்களின் சேவை தொடர்ந்து தேவையில்லையென தோட்டக் கம்பனி தீர்மானிக்கின்ற போது தொழிலாளியிடமுள்ள காணியில் அல்லது வழங்கப்படுகின்ற 05 மில்லியன் ரூபாய்களில் காணியொன்றைக் கொள்வனவு செய்து வீட்டை அமைப்பதற்கும் உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் வசதியளிக்கப்படும் எனும் பகுதியை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைச் செய்ய வேண்டுமென்றால் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின் நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டும். இதேவேளை சிவில் அமைப்புகளும் கவனயீர்ப்பு முன்னெடுப்புகளை முன்னெடுக்க வேண்டும். அதேவேளை ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைத்த ஹட்டன் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் படி கோர வேண்டும்.










