டித்வா அனர்த்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்குக் காணி வழங்க பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சு

டித்வா (Ditwa) அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக, புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (27) நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டுவதற்குத் தேவையான காணிகளை பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து (RPC) பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும்.

காணிகளை இனங்காணுதல்:

அனர்த்தத்தினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் (NBRO) மண்சரிவு அபாயம் உள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள காணிகளுக்கு மேலதிகமாக, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான பொருத்தமான காணிகளையும் இதற்காகப் பயன்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்கள், தற்போது வசிக்கும் அதே பகுதிகளிலேயே அவர்களுக்கு புதிய காணிகளை வழங்குவதற்கு அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிரந்தர வீடுகளைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமையாகும் என்றும், அதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் (CEOs) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles