கடந்த 22 ஆம் திகதி தம்புள்ளை ரஜமஹா விகாரைக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிக்கான நடைபயணம், 210 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தைக் கடந்து இன்று (28) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தது.
இங்கு, புனித தந்ததாது மற்றும் ஜய ஸ்ரீ மகா போதியின் கன்றையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வண, பஞ்ஞாகர தேரரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட குழுவினர் இந்நாட்டில் மேற்கொண்ட நடைபயணம், நமது நாட்டில் ஒரு புதிய தர்ம எழுச்சியை உருவாக்கியுள்ளது என்றும், அத்துடன் ஒழுக்கம் மற்றும் தர்ம நெறிகளைக் கடைப்பிடிக்கும் தேரர்கள் மீது இந்நாட்டு பொதுமக்களுக்கு இருக்கும் மிகுந்த பக்தியையும் கௌரவத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது என்றும் இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
மேலும், அவரது போதனையான விழிப்புணர்வை பயிற்சி செய்து, இந்த அமைதியான தீவை மனிதநேயமிக்கத் தீவாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இன்று நாட்டில் ஆங்காங்கே இடம்பெறும் சில சம்பவங்கள், மத எழுச்சி தொடர்பாக மக்களிடையே ஒருவித நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மதத்தலங்களின் கௌரவத்தையும் மதிப்பையும், தர்மத்தின் உள்ளடக்கத்தையும் பாதுகாப்பதற்கு அனைத்து மதத் தலைவர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளதாகவும், அதற்காகத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது விசேட அனுசாசனை உரை நிகழ்த்திய வண, மெல்பிட்டியே விமலக்கித்தி தேரர், எதிர்காலத்தில் அமெரிக்காவில் பௌத்த மதம் குறித்துப் பேசப்படும்போது, இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட போதி மரத்தின் கன்று மற்றும் புனி தந்த தாது தொடர்பான இந்த வரலாற்று நிகழ்வு நினைவுகூரப்படும் எனக் குறிப்பிட்டார்.
இது ஒரு இலங்கைத் தேசமாக அமெரிக்காவில் பௌத்த மதம் குறித்துப் பெருமிதம் கொள்ளக்கூடிய ஒரு வரலாற்றுத் தருணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்ததாவது:
எமது அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்து இந்த அமைதிக்கான பணியில் ஈடுபட்டதற்காக வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரருக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், இதன் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட வணக்கத்திற்குரிய மெல்பிட்டியே விமலக்கித்தி தேரருக்கும் நன்றி கூற வேண்டும்.
அமைதியின் பெறுமதி குறித்து இலங்கைக்கு பல அனுபவங்கள் உள்ளன. நீண்டகாலப் போரின் பேரழிவு குறித்த மிகவும் வேதனையான அனுபவங்களைக் கொண்டவர்கள் நாம்.
அதாவது, அமைதி எவ்வளவு முக்கியமானது, உலக அமைதி உலகிற்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்யும் என்றஎதிர்பார்ப்பு நம் அனைவரிடமும் உள்ளது. இதற்காகப் பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட பிக்குகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு எமது நன்றிகளையும் கௌரவத்தையும் தெரிவிக்க வேண்டும்.
தர்ம பாத யாத்திரைகள் இலங்கையர்களாகிய நமக்கு புதிய ஒன்றல்ல. அது எமது கலாசாரத்தின் ஒரு அங்கமாகும். புத்தபெருமான் தனது முதல் அடியார்களுக்கு இது தொடர்பில் போதித்தார்.
புத்தரின் அந்தப் போதனையை முன்னிறுத்தி, உலகம் முழுவதும் வசிக்கும் எமது கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பொதுமக்களின் நன்மைக்காகவும் சுகத்திற்காகவும் தர்மப் பிரயாணங்களை மேற்கொண்டுள்ளனர் என்று நான் கருதுகிறேன்.
மஹிந்த தேரரின் இலங்கைக்கு வருகையானது எமது நாட்டின் பாரிய கலாசாரத்தை உருவாக்குவதற்குப் பங்களித்தது. அதன் பின்னர், 17 ஆம் நூற்றாண்டில் உபசம்பதா பிக்குகளை நாம் இழந்திருந்தோம் என்பதை நாம் அறிவோம்.

இதனால் மீண்டும் சாசனத்தை நிறுவும் சவாலை நாம் எதிர்கொண்டோம். அங்கு எமது சரணங்கர சங்கராஜ தேரரின் தலைமைத்துவம் மற்றும் தலையீட்டில் உபாலி நாயக்க தேரரினால் எமது நாட்டில் மீண்டும் பிக்கு சாசனம் நிலைநாட்டப்பட்டது. இது தாய்லாந்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் விளைவாகும்.
அதேபோல் வெலிவிட்ட சரணங்கர சங்கராஜ தேரர் பாரிய தர்மப் பிரயாணங்களை மேற்கொண்டார். தர்ம நூல்களைத் தேடிக் கண்டறிந்து, பிக்குமார் பற்றிப் பரவியிருந்த தவறான கருத்துக்களை அகற்றி, தர்மத்தின் சாரத்தைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல அவர் செயற்பட்டார். எனவே இவ்வாறான யாத்திரைகள் குறித்து எமக்கு நீண்ட வரலாறு உள்ளது.
எமது தேரர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குச் சென்று, தமது கால்கள் தேயும் வரை, தமது குரல் ஓயும் வரை போதனைகளை வழங்கி தர்மப் பிரயாணங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட குழுவினரின் இந்தப் நடைபயணமானது எமது நாட்டுக்குள் ஒரு புதிய தர்ம எழுச்சியை உருவாக்கியுள்ளதாக நான் கருதுகிறேன். ஒழுக்கம் மற்றும் தர்மத்தில் தேர்ந்த தேரர்கள் மீது எமது பொதுமக்களுக்கு எவ்வளவு பக்தியும் நம்பிக்கையும் உள்ளது என்பது இந்தப் பயணத்தின் மூலம் உறுதியானது.
பௌத்த மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வீதியோரங்களில் காத்திருந்து, அவர்கள் மீது தமது கௌரவத்தையும் அன்பையும் வெளிப்படுத்துவதை நாம் கண்டோம். இது பௌத்த தர்மத்தின் விடுதலைச் சாரத்தைப் பொதுமக்களின் மனதில் பதிய வைப்பதற்கான ஒரு பாரிய முயற்சியாக அமைந்தது என நாம் நம்புகிறோம்.
எமது நாட்டின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், பொருளாதாரச் செழிப்பை எட்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மத எழுச்சியும் ஏற்பட்டிருந்தது. மத எழுச்சி வீழ்ச்சியடைந்த போதெல்லாம் பொருளாதாரம் மற்றும் சமூகம் வீழ்ச்சியடைந்தது.
எனவே எமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தை உயர்வாக வளர்த்தெடுக்க வேண்டுமானால், அதற்கு இணையாகப் புதியதொரு மத எழுச்சி அவசியமாகும். இன்று நாம் காண்பது, பாரிய அளவில் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே நடக்கும் சில சம்பவங்கள் மத எழுச்சி குறித்து மக்கள் மத்தியில் ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. எனவே, எமது அனைத்து மதத் தலைவர்களுக்கும் அந்த மதங்களின் கௌரவம், பெறுமதி, வரலாற்று மரபு,
தர்மத்தின் சாரம் இவை அனைத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு உள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் அதற்காக வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க நாம் தயாராக உள்ளோம்.
எமது நாட்டை ஒரு அமைதியான, மோதல்கள் இல்லாத நாடாக மாற்றியமைக்க வேண்டுமானால் சட்டம் மாத்திரம் போதுமானதல்ல. நாம் பாராளுமன்றத்தில் போதியளவு சட்டங்களை இயற்றியுள்ளோம். சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிறுவனங்களை நிறுவியுள்ளோம்.
அந்த நிறுவனங்களுக்கு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். ஆனால் நாடு அறநெறி மிக்கதாக மாறியுள்ளதா? சட்டத்தை மதிப்பதாக உள்ளதா? நாட்டை அறநெறி மிக்கதாகவும் சட்டத்தை மதிப்பதாகவும் மாற்றுவதில் எமது மதஸ்தலங்களுக்குப் பாரிய பங்களிப்பு உள்ளது என நாம் நம்புகிறோம்.
எமது நாட்டை அபிவிருத்தி மற்றும் அமைதியான சமூகத்தை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்தில், மத எழுச்சியும் மதத்தை நோக்கிய சமூகமும் அவசியமாகியுள்ளது.
அதற்காக இணைந்துகொள்ளுமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அமைதி பற்றிய உரையாடல்களில் எமது நாடு உலகிற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கக்கூடிய பூமி. போர் மோதல்கள், ஒருவருக்கொருவர் இடையிலான பகைமை, குரோதம், அவநம்பிக்கை என்பன நிலவியிருந்தன.
ஆனால் நாம் ஒரு நாடாகப் படிப்படியாக பகைமை, குரோதம், அவநம்பிக்கை என்பவற்றைத் தணித்து, அமைதியான அரசொன்றையும் ஒருவருக்கொருவர் கலாசாரங்களை மதிக்கும் சமூகத்தையும் உருவாக்குவதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.
இலங்கையைப் போலவே உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பு அமைதிதான். பெரும்பான்மையான மக்கள் அமைதியை எதிர்பார்க்கும் போது மோதல்கள் எப்படி உருவாகின்றன? இந்த நேரத்திலும் உலகின் பல நாடுகளில் போர் பரவியுள்ளது.
போரில் தற்காலிகமாக ஒரு தரப்பினர் வெற்றி பெற்றதாக நாம் நினைத்தாலும், போரைத் தற்காலிகமாக வென்ற நாடு கூட ‘எமக்குத் தேவையானது அமைதி’ என்றே கூறுகிறது.
அதுதான் யதார்த்தம். ஆனால் பொதுமக்கள் அமைதி மீது நம்பிக்கை கொண்டிருக்கும் போது ஏன் போர் உருவாகிறது? ஒரு
பக்கம் பொதுமக்கள் அமைதியை எதிர்பார்க்கும் அதே வேளை, அதிகார வர்க்கத்தினர் போரை நம்புகின்றனர்.
சந்தேகம், அவநம்பிக்கை, பகைமை, குரோதம் இல்லாத அரசொன்றை மற்றும் மனித சமூகத்தைப் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அதேவேளை, தீவிரவாதிகள் மற்றும் சதிகாரர்கள் பிரிவினையையும் இனவாத மோதல்களையும் எதிர்பார்க்கின்றனர்.
அதாவது அமைதியை விரும்பும் பெரும்பான்மையான மக்களை விஞ்சி, ஒரு சிலரே போரின் நிகழ்ச்சி நிரலைக் கையில் எடுத்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே எமது தாய்நாடும் உலகமும் பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்க்கும் அமைதிப் பாதையில் நுழைய வேண்டும்.
எமது வணக்கத்திற்குரிய பஞ்ஞாகார தேரரும் நாமும் இந்த அனர்த்தத்தைக் காண்கிறோம். இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணத்தை அவர் போதித்தார். அமைதியின் போது முதலில் மேலோங்குவது மனிதாபிமானமே. போரின் போது முதலில் மரணிப்பதும் மனிதாபிமானமே. எனவே, மீண்டும் மனிதர்களாக செயற்பட நாம் உறுதிபூண வேண்டும்.
இந்த நாடுதான் உலகின் அமைதியின் தீவு. இந்த நாட்டை உலகின் முன்மாதிரியான தீவாக மாற்ற நாம் முயற்சி செய்து வருகிறோம். செல்வம், இயந்திரங்கள் என்பவற்றில் எம்மால் முதலிடத்தைப் பிடிக்க முடியாவிட்டாலும், மனிதாபிமானத்தில் உலகில் முதலிடத்தைப் பிடிக்க முடியும். அதற்காக எமது மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் தொடர்ச்சியாக நிகழ்த்தும் போதனைகள் பேருதவியாக அமையும். அதன் மூலம் அமைதியின் தீவை ‘மனிதாபிமானத்தின் தீவாக’ மாற்றுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, எமது பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினருக்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விஹாரை தரப்பின் அநுநாயக்க வண, நியங்கொட விஜித சிறி தேரர், அஸ்கிரி மகா விஹாரை தரப்பின் அநுநாயக்க வண, நாரம்பனாவே ஆனந்த தேரர், வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதி ரஜமகா விகாராதிபதி வண, கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர், வண, மெல்பிட்டியே விமலகித்தி நாயக்க தேரர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, உள்ளிட்ட அமைச்சர்கள், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படைப் பிரதானிகள் மற்றும் கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார உட்பட பொதுமக்கள் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
